விளையாட்டு

மலேசிய கிண்ண இறுதி ஆட்டம்

30/11/2021 07:14 PM

கோலாலம்பூர், 30 நவம்பர் (பெர்னாமா) -- நூறாவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி சுற்றில், ஜோகூரின் ஜெ.டி.தியும்  கே.எல்.சிட்டியும் இன்று இரவு 9 மணிக்கு புக்கிட் ஜாலில் அரங்கில் களம் காண்கின்றன.

நடப்பு வெற்றியாளரான ஜெ.டி.தி அதன் நிலையைத் தற்காத்துக் கொள்ளுமா, அல்லது புதிய வரலாற்றுடன் கே.எல்.சிட்டி  கிண்ணத்தை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு, மலேசிய காற்பந்து ரசிகர்களிடையே மேலோங்கி இருக்கிறது.

இம்முறை மலேசியக் கிண்ண ஆட்டங்களின்போது இரு அணிகளும் தோற்காமல் 10 போட்டிகளில் வெற்றிக் கண்டிருக்கின்றன.  ஜெ.டி.தி மொத்தமாக இதுவரை 19 கோல்களைப் போட்டு 80 விழுக்காடு முன்னிலை வகிக்கும் வேலையில், அது வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கணிப்புகள் கூறுகின்றன.

இதனிடையே, கே.எல்.சிட்டி 19 கோல்களோடு 60 விழுக்காட்டினை பதிவு செய்துள்ளது.

1987, 1988 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று கிண்ணத்தை வென்றிருக்கும் கே.எல்.சிட்டி , 29 ஆண்டுகளுக்கு பிறகு, அரையிறுதிக்கு முன்னேறி தற்போது இறுதி சுற்றில் கால் வைத்திருக்கிறது.

இறுதி ஆட்டத்தில் ஜெ.டி.தி கிண்ணத்தை வென்றால், டிசம்பர் முதலாம் தேதியன்று ஜோகூரில் சிறப்பு விடுமுறையை அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முதன் முறை சந்திக்கும் இவ்விரு அணிகளும் தனித்தனியே பலம் பொருந்தி இருப்பதால், வெற்றியைச் சொந்தமாக்கி கொள்ளும் முயற்சியில் ஆட்டம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

-- பெர்னாமா