பொது

அழகியல் சேவை தொடர்பில் 103 புகார்கள் - சுகாதார அமைச்சு

24/09/2022 10:25 PM

கோலாலம்பூர், 24 செப்டம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை அழகியல் சேவை தொடர்பில் 103 புகார்களை சுகாதார அமைச்சு பெற்றுள்ளது.

முறையான திறனில்லாத அழகியல் துறை சார்ந்த மருத்துவர்களும், மருத்துவர் அல்லாதவர்களும் மேற்கொண்ட அழகியல் செயல்முறைகள் காரணமாக ஊனம், இறப்பு உட்பட பக்க விளைவுகளை உட்படுத்தி அந்த புகார்கள் பெறப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டு தனியார் சுகாதார பராமரிப்பு வசதி மற்றும் சேவை சட்டம், சட்டம் 586-இன் கீழ் பதிவு அல்லது உரிமம் அல்லாத சிகிச்சையகங்களில் தகுதியுள்ள மருத்துவர்களால் மட்டுமே அழகியல் மருத்துவ செயல்முறைகளை மேற்கொள்ள முடியும் என்று கைரி குறிப்பிட்டார். 

கோலாலம்பூரில், இன்று சனிக்கிழமை 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய தோல் மருத்துவம் மற்றும் அழகியல் மருத்துவ மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறும் அந்த மாநாட்டில் 50 பேராளர்கள், 30 முகப்புகள்,  சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தாய்லாந்து, தைவான், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)