தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் வியாபார பெருவிழா

11/10/2022 08:31 PM

கிள்ளான், 11 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளியை முன்னிட்டு I SEED எனப்படும், சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் ஏற்பாட்டில், மூன்று நாட்களுக்கு வியாபார பெருவிழா நடத்தப்பட்டுள்ளது. 

இதில், சுமார் 100 சிறுத்தொழில் வியாபாரிகள் பயனடைந்துள்ளதாக, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் வீரமான் தெரிவித்தார்.

தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால், பெருநாள் காலங்களில் வியாபாரிகள் தங்களது வருமானத்தை ஈட்டுவதற்கு, சிறந்த ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

I SEED திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு வியாபாரத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டதாக  கணபதி ராவ் தெரிவித்தார்.

அவற்றைக் கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி வரையில் இந்த வியாபாரச் சந்தையை அவர்கள் நடத்தினர்.

சிலாங்கூரில், முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி போன்று இனிவரும் காலங்களில் இதர மாநிலங்களில் நடத்தினால், வியாபாரிகளின் வளர்ச்சிக்கு அது ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்று கணபதி ராவ் தெரிவித்தார். 

''தீபாவளி சந்தை மட்டுமல்லாமல் I-SEED திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அவர்களுக்கு தளவாட பொருட்கள் வழங்கியிருக்கின்றோம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விற்பனை செய்திருக்கின்றனர்,'' என்றார் அவர்.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், I SEED வழங்கிய இந்த வாய்ப்பு தங்களுக்கு மிகப்பெரிய உதவி என்று வியாபாரிகள் சிலர் பெர்னாமா செய்திகளிடம் கூறினர். 

''மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது. இடம் உட்பட மேஜை, நாற்காலி போன்ற தளவாட பொருட்களை வழங்கியிருப்பது வசதியாக உள்ளது,'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாகவே, தளவாட பொருட்கள் வழங்கப்பட்டதால், தங்களின் வியாபார பொருட்களை மட்டுமே கொண்டு வந்து விற்பனை செய்ய எளிமையாக இருந்ததாக இன்னும் சிலர் கூறினர்.

இதர நாட்களை விட பெருநாள் காலங்களில் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றுகூறிய அவர்கள், இதுபோன்ற வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்ட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)