பொது

முதல் முறையாக ருக்குன் நெகாரா கோட்பாட்டை வாசித்து, வரலாற்றில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

27/02/2024 07:41 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்றைய மக்களவைக் கூட்டம் தொடங்கியதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக ருக்குன் நெகாரா கோட்பாட்டை வாசித்தது, வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

மக்களவைச் செயலாளர் நிசாம் மைடின் பச்சா மைடின் தலைமையில் அவர்கள் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

மக்களவையில் ருக்குன் நெகாராவை முழுமையாக வாசிக்க, கடந்தாண்டு ஜூலை 25-ஆம் தேதி அமைச்சரவையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒருமைப்பாட்டு அமைச்சின், முயற்சியின் ஒரு பகுதியாக இன்று அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளையில், 15-ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான மூன்றாவது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது சட்டங்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மக்களவைத் தலைவர் Tan Sri Johari Abdul தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தேசிய நீர் சேவை ஆணையச் சட்டம், 2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட உள்நாட்டு வருமான வரி வாரிய சட்டம், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டச் சட்டம், 2023-ஆம் ஆண்டு நிதி சட்டம், 2023-ஆம் ஆண்டு பொது நிதி மற்றும் நிதி கடப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றை அது உட்படுத்தியுள்ளது.

அதோடு, 2023ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொழிற்சங்கச் சட்டம், 2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட நிறுவனச் சட்டம், 2023-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகை பிடிக்கும் பொருட்களின் பாதுகாப்புச் சட்டம், 2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட உணவுச் சட்டம் ஆகியவையும் அடங்கும்.

"சற்று முன்னர் தான் ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மக்களவையில் இருக்கும் காலகட்டம் முழுவதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மக்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

மேலும், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி உயிரிழந்த சரவாக் மாநில முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தாயிப் மாஹ்முட்டின் குடும்பத்தினருக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)