பொது

ஒத்திகையின் போது தி.எல்.டி.எம்-இன் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகின

23/04/2024 03:06 PM

லூமுட், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- சனிக்கிழமை நடைபெறவிருக்கும் அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம்-இன் பொது சந்திப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்றாவது ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது, தி.எல்.டி.எம் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

பேராக், லூமுட் மற்றும் சபா, கோத்தா கினபாலுவில் உள்ள தி.எல்.டி.எம் தளங்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் அச்சம்பவத்தில் பலியானதை தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் உறுதிப்படுத்தினார்.

அந்த இரு ஹெலிகாப்டர்களிலும் பயணித்த 10 உறுப்பினர்களும் 40 வயதிற்கு கீழுள்ளவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், மெரிடிம் மலேசியா மற்றும் தி.எல்.டி.எம்-க்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மோதி கொண்ட சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண, தி.எல்.டி.எம் தரப்பு விசாரணை வாரியத்தை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீச்சல் குளம் மற்றும் காலியான மைதானப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர்கள் விழுந்ததால், ஒத்திகையில் ஈடுபட்ட மற்ற உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

''பொதுமக்கள், இந்த சம்பவம் தொடர்பான காணொளிகளைப் பரப்ப மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். உணர்வுகளைப் பேணுவதற்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மதிப்பளிக்கும் அதே நேரத்தில் விசாரணை செயல்முறைக்கு இடையூறாக இருக்கக் கூடாது,'' என்றார் அவர்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், கோத்தா கினபாலுவில் உள்ள தி.எல்.டி.எம் தளத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் லூமுட்டிற்கு அழைத்து வரப்படுவர் என்றும் முஹமட் காலிட் குறிப்பிட்டார்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள கெமெந்தே முகாமில், தற்காப்பு அமைச்சின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்விபத்து குறித்து கருத்துரைத்தார்.

இதனிடையே, ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முஹமட் காலிட் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பான தகவலையும் விசாரணை அறிக்கையையும் பெறுவதோடு, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிடவிருப்பதாக அவர் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட முகாமில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் முஹமட் காலிட் சந்திக்கவிருக்கிறார்.

''அமைச்சு தரப்பிலும், தனிப்பட்ட முறையிலும் உயிரிழந்த 10 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட கொண்டாட்டத்திற்கு தயாராக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது,'' என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)