பொது

வெளிநாட்டில் பணிபுரியும் மலேசியர்களைக் கண்காணிக்க செயல்முறை உருவாக்க அரசாங்கம் பரிசீலனை

03/07/2024 07:24 PM

கோலாலம்பூர், 03 ஜூலை (பெர்னாமா) -- நாடு தற்போது எதிர்கொள்ளும் brain drain எனப்படும் திறமைசாலிகள் புலம்பெயரும் பிரச்சனைகளைக் களையும் முயற்சியாக, வெளிநாட்டில் பணிபுரியும் மலேசியர்களைக் கண்காணிக்க ஒரு செயல்முறையை உருவாக்குவதற்கான அவசியம் இருப்பதாக அரசாங்கம் கருதுகிறது.

ஏனெனில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற மலேசியர்களின் எண்ணிக்கை அல்லது விழுக்காடு குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தை, தற்போது நாடு கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

''எதுவாக இருப்பினும் எவ்வளவு பேர் அல்லது விழுக்காட்டினர் வேலை செய்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எங்களிடம் முறையாக இல்லை. எனவே, அவர்களின் அனுமதியுடன், கண்காணிக்கும் சிறந்த செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,'' என்றார் அவர்.

அதேவேளையில், பொது சேவை துறை ஊழியர்களுக்கான ஊதிய முறையை மேம்படுத்துவது உட்பட திறமைசாலிகள் புலம்பெயரும் பிரச்சனையைத் தடுக்க அரசாங்கம் தற்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

“பொது சேவைத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கு வெளிநாட்டில் வழங்கப்படும் வருமானத்திற்கு நிகரான ஊதியம் பெறுவதற்கான வழிகளில் அதுவும் ஒன்றாகும். ஆனால் அது நம் நாட்டின் நிதியைப் பொறுத்தது,“என்றார் அவர்

நிபுணர்கள் புலம்பெயரும் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியாக, திறமையான மலேசியர்களை நாட்டிற்குத் திரும்ப வரவழைப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502