பொது

'கிக்' ஊழியர்களின் நலன் தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

04/07/2024 05:31 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- 'கிக்' (GIG) எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதாரத் துறை ஊழியர்களின் நலன் தொடர்பான சட்ட மசோதா முதல் முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தற்காலிக தொழில்சார் பொருளாதாரத் துறை ஊழியர்களின் ஆணையத்தை அமைக்கும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அம்முடிவு எட்டப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

'கிக்' தொழிலாளர்களின் விவகாரங்களைக் கையாள ஒரு புதிய சட்டத்தை மனிதவள அமைச்சு முன்வைக்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும், இந்தப் புதிய சட்டத்தின் முதல் வாசிப்புக்கான தேதியை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நாடாளுமன்ற அமர்வில் தேர்வு செய்துள்ளோம்,'' என்றார் அவர்.

அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதற்கு முன்னர் இந்தச் சட்டம் தொடர்பான அமைச்சரவைக் குறிப்பை இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு செய்ய மனிதவள அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

'கிக்' தொழிலாளர்களின் நலன் காக்க தற்போது உள்ள 1955-ஆம் ஆண்டு வேலைச் சட்டத்தில் திருத்தம் அல்லது புதிய சட்டம் இயற்றப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]