11 அமைச்சுகளை உள்ளடக்கி 2024-ஆம் ஆண்டு தேசிய தணிக்கைத் துறைத் தலைவரின் இரண்டாவது அறிக்கை

04/07/2024 06:38 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- நான்காயிரத்து 197 கோடி ரிங்கிட் மதிப்பிலான நிகழ்ச்சிகள், திட்டங்கள் அல்லது நடவடிக்கைகளை உட்படுத்தி 11 அமைச்சுகளில் ஒன்பது தணிக்கை நடவடிக்கைகளை உள்ளடக்கி 2024-ஆம் ஆண்டு தேசிய தணிக்கைத் துறைத் தலைவரின் இரண்டாவது அறிக்கையில் அமைந்துள்ளது.

குறைவான கண்காணிப்பு, முழுமையான தரவுத்தளம் இல்லாதது மற்றும் பலவீனமான கொள்கைகள் போன்ற பல்வேறு காரணங்களால் அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சில பலவீனங்களும் பதிவாகியுள்ளன.

அந்தத் தணிக்கை, அமைச்சுகள் அல்லது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறைகள் உட்பட சட்டப்பூர்வ கூட்டரசு அமைப்புகளின் செயல்பாடுகளை உட்படுத்தியுள்ளது.

மேலும், ஒன்பதாவது மலேசியா திட்டம் தொடங்கி 12-வது மலேசிய திட்டம் வரையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் உள்ளடக்கியது என்று தேசிய தணிக்கைத் துறைத் தலைவர் டத்தோ வான் சுராயா வான் முஹமட் ரட்சி தெரிவித்தார்.

இந்தப் பலவீனத்தினால், திட்டங்களும் நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவு பெறாததோடு வேலை தரம் திருப்திகரமாக இல்லாமல், செலவுகள் அதிகரித்ததாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, செலவழிக்கப்பட்ட நிதியின் வழி அரசாங்கம் சரியான வருமானத்தைத் திரும்பப் பெறவில்லை என்றும் டத்தோ வான் சுராயா குறிப்பிட்டார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதல் பெற்றப் பின்னர் இன்று நாடாளுமன்றத்தில் எல்.கே.ஏ.என் 2/2024 தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதிக்குப் பின்னர், இவ்வாண்டும் இரண்டாம் முறையாக எல்.கே.ஏ.என் தாக்கல் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]