சிறப்புச் செய்தி

மோசமான குடும்ப சூழ்நிலையால் குழந்தைகளுக்கு மனநல பிரச்சனைகள் ஏற்படலாம் 

04/07/2024 08:35 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- உணர்ச்சி, சிந்தனை அல்லது செயல்பாடு ஆகியவற்றினால் ஏற்படும் மாற்றங்களால் ஒரு தனிநபர் மனநல பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இந்த மாற்றம் சமூகம், வேலை அல்லது குடும்ப விவகாரம் தொடர்புடையதாக இருக்கலாம்.

தற்போது பெரியவர்கள் மட்டுமல்ல, அதிகமான குழந்தைகளும் இந்த மனநலப் பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதற்கு, குடும்ப சூழ்நிலையும் அவர்கள் பராமரிக்கப்படும் முறையும் முக்கிய காரணமாக இருப்பதாக மலேசிய குழந்தைநல மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் செல்வகுமார் சிவப்புண்ணியம் தெரிவித்திருக்கின்றார்.

சுகாதார அமைச்சின் தேசிய நோயுற்ற சுகாதார ஆய்வின் தரவுகளின் படி, கடந்த 2019ஆம் ஆண்டில் மலேசியாவில் நான்கு லட்சத்து 24 ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 16.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நோய், 1996 ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும், இம்முறை இரு மடங்காக உயர்வு கண்டிருப்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும் என்று டாக்டர் செல்வகுமார் சிவப்புண்ணியம் கூறினார்.

5 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் அல்லது இளைஞர்கள் மத்தியில், அறுவரில் ஒருவர் இப்பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்கள் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்துக் கண்டுப்பிடிக்க முடியும் என்கிறார் டாக்டர் செல்வகுமார்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்கள் எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் வளரும் முறையும் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதை டாக்டர் செல்வகுமார் விளக்குகின்றார்.

''வழக்கமாக பெற்றோர்களின் முறையற்ற பராமரிப்பு இதற்கு காரணமாகின்றது. அதோடு, சமுதாயம் இவர்களை வழிநடத்தும் முறையும் இதில் அடங்கும்,'' என்றார் அவர்.

அதோடு, பெற்றோர்கள் எதிர்நோக்கும் மனநல பிரச்சனைகளால் அவர்களின் பிள்ளைகளும் பாதிப்படைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் விவரித்தார்.

இந்நிலையில், தங்களின் பிள்ளைகளை மனநல பிரச்சனையில் இருந்து விடுவிப்பதற்கு பெற்றோர்களின் அக்கறையும் அரவணைப்புமே அதிகம் தேவைப்படுவதாக டாக்டர் செல்வகுமார் அறிவுறுத்தினார்.

குறைந்தபட்சம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கு பெற்றோர்கள் முன் வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''தற்போதைய காலக்கட்டத்தில் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து உணவு உண்பதற்கு கூட நேரம் போதவில்லை. பிள்ளைகளுடன் குறைந்த நேரம் செலவிட்டால் கூட அவர்களின் பிரச்சனையை கண்டறிய முடியும். அவர்களுடன் பணிவாக பேச வேண்டும்,'' என்றார் அவர்.

இப்பிரச்சனைக்குத் தீர்வுக் காண்பதில் பெற்றோர்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், சுகாதாரச் சிகிச்சையகங்களில் ஆலோசனை பெறுவதற்கு அழைத்துச் செல்லலாம்.

எனவே, மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்படும் குழந்தைகள் அல்லது இளைஞர்களின் எண்ணிக்கை இனி வரும் காலங்களில் அதிகரிக்காமல் இருக்க பெற்றோர்களுக்கு முழு பொறுப்பு உள்ளதை அவர்கள் உணர வேண்டும் என்று டாக்டர் செல்வகுமார் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502