பொது

இணைய மோசடி குற்றங்களை ஒழிக்கத் திருத்தம் செய்யப்பட்ட குற்றவியல் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

04/07/2024 06:41 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- போலி வங்கிக் கணக்குகள் தொடர்பான இணையம் வழியான மோசடி குற்றச்செயல்களை ஒழிக்க, திருத்தம் செய்யப்பட்ட குற்றவியல் சட்டம், சட்டம் 572 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம், சட்டம் 593, இம்முறை நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரம் இல்லாமலும் அதிகாரப்பூர்வ நோக்கம் இல்லாமலும், தமது வங்கி கணக்கைப் பிறர் பயன்படுத்த அனுமதிக்கும் தரப்பின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான புதிய குற்றத்தை உள்ளடக்கி திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகச் சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

இணையம் வழியான மோசடி குற்றச்செயல் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்கை முடக்க இத்திருத்தத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளும்போது, அவர்களின் வங்கிக் கணக்குகள் விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ வாடகைக்கு அல்லது பிறர் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற வங்கிக் கணக்கைத் தவறாகப் பயன்படுத்திய மூன்றாம் தரப்பினர் குறித்து இந்த வங்கிக் கணக்கு உரிமையாளர்களுக்கு வழக்கமாகத் தெரியாமல் இருப்பது, விசாரணைக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.

இன்று, மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அதோடு, இணையம் வழியான மோசடியின் வழி, பாதிக்கப்பட்டவர்களின் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இச்சட்டத் திருத்தம் போலீசாருக்கு அனுமதி அளிக்கவிருப்பதை அசாலினா சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)