அரசியல்

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கமாட்டார்கள்

04/07/2024 08:39 PM

நிபோங் திபால், 04 ஜூலை (பெர்னாமா) -- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலை அங்குள்ள இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கப்போவதில்லை.

மாறாக, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதித்து போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ஜொஹாரி அரிஃபினுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவர் என்று கெஅடிலான் கட்சியின் பினாங்கு மாநில உதவித் தலைவர் ஏ.குமரேசன் நேற்று தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் புதிய தமிழ்ப்பள்ளி நிர்மானிப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தினால் அதன் 75 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுவதை ஏ.குமரேசன் மறுத்துள்ளார்.

இது, அந்த சிறுபான்மை வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சி பயன்படுத்தும் உக்தி என்று Batu Uban சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

''சுங்கை பாக்காப் விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் விரிவான விளக்கமளிப்பார். அதோடு, நாங்களும் கட்சி சார்பில் இப்பள்ளியைத் தற்காப்பதில் போராடுவோம். நிச்சயமாக விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என்றார் அவர்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதியில் 17 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டினரை வாக்களிக்க வைப்பதற்கு தங்கள் தரப்பு பணியாற்றி வருவதாக குமரேசன் குறிப்பிட்டார்.

''வாக்களிப்பு தினத்தன்று நாங்கள் போக்குவரத்து வசதியையும் ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார் அவர்.

எனவே, இதுபோன்ற வதந்திகளைப் புறக்கணித்து மக்கள் குறிப்பாக இந்தியர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதிலிருந்து தவறக்கூடாது என்று குமரேசன் வலியுறுத்தினார்.

சுங்கை பாக்காப் புதிய தமிழ்ப்பள்ளி நிர்மானிப்பை கல்வி அமைச்சு ரத்து செய்ததால், 75 விழுக்காட்டு இந்தியர்கள் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பது, அத்தொகுதி இந்தியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்ததாக முன்னதாக வாட்சப் செயலி வழி தகவல் பகிரப்பட்டு வந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]