விளையாட்டு

ஆறு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 'ஜெர்சி' வழங்கி சிறப்பித்தது  SHEKHINAH PR நிறுவனம்

04/07/2024 08:04 PM

 ஷா ஆலாம், 04 ஜூலை (பெர்னாமா) --  80-களில் இந்தியர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த காற்பந்து விளையாட்டுத் துறை கால ஓட்டத்தில் மிகவும் குறைந்துவிட்டது.

காற்பந்து விளையாட்டில் இந்திய சமூகத்தினர் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டுமானால் அது அடுத்த தலைமுறையால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவித்து காற்பந்து விளையாட்டின் மகத்துவம்  மற்றும் அதன் நன்மைகளை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு முதல்கட்டமாக 'ஜெர்சி' உடை வழங்கி உற்சாகம் அளித்துள்ளது SHAKHAINAH PR நிறுவனம்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில்  ஜூலை 13ஆம் தேதி சுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ. திடலில் நடைபெறவிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கான காற்பந்துப் போட்டியை முன்னிட்டு ஆறு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 'ஜெர்சி' வழங்கியிருப்பதாக SHEKHINAH PR நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கிறிஸ்டோபர் ராஜ் கூறினார்.

தேசிய வகை எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஹைலன்ட் தமிழ்ப்பள்ளி, ராசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, பாங்கி தமிழ்ப்பள்ளி, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி ஆகியவையே அந்த ஆறு பள்ளிகளாகும்.

கடந்த பத்தாண்டுகளாக இக்காற்பந்து போட்டிக்கு தமது நிறுவனம் ஆதரவளித்து வருவதாகக் கூறிய அவர், சமூக கடப்பாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ்வாண்டும் இப்போட்டி வெற்றியடைய தாம் கைக்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"அதிகமான இந்திய இளைஞர்கள் காற்பந்து விளையாட்டில் தடம் பதித்து புதிய சாதனைப் படைக்க வேண்டுமென்பதே எங்களின் ஆவலாகும். அந்த ஊக்குவிப்பும் உந்துதல் சக்தியும் பள்ளி அளவிலிருந்து தொடங்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்தகைய பெரிய முயற்சி எடுத்திருக்கும் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கியதற்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று அவர் கூறினார். 

காற்பந்து மட்டுமின்றி, பூப்பந்து, ரஃபி போன்ற விளையாட்டுகளுக்கும் இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆதரவினை வழங்கி வருவதாகவும் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார். 

பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு 20ஆவது ஆண்டாக பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் இப்போட்டியை வெற்றிகரமாக ஏற்று நடத்தவுள்ளது.

இவ்வாண்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் 24 அணிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட குழுக்கள் களமிறங்கவுள்ளதாக பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின்  துணைத் தலைவர் கென்னத் கண்ணா தெரிவித்தார். 

"அந்த வகையில் ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஜெர்சி உடை வாங்கிக் கொடுத்து கிறிஸ்டோபர் ராக் ஆதரவு வழங்கியுள்ளார். அதேப்போல போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை தொழிலதிபர் டத்தோ ரவின் வழங்கியுள்ளார். மேலும் கல்வியமைச்சிலிருந்தும் அதிகமான நல்லுள்ளங்கள் பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். 20 ஆண்டுகளாக மைலோ நிறுவனமும் எங்களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது," என்று அவர் விவரித்தார்.

நாடு தழுவிய அளவிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களை இப்போட்டிக்கு அழைத்து வருவதில் பள்ளி நிர்வாகம் குறிப்பாக தலைமையாசிரியர் மன்றம் பெரிதும் துணைப் புரிவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இப்போட்டியில் வெற்றி பெறும் குழுவிற்கு மூவாயிரம் ரிங்கிட்டும் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு முறையே ஈராயிரம் மற்றும் ஆயிரம் ரிங்கிட்டுடன் கிண்ணம், பதக்கம், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்படும் என்று கெனத் கண்ணா குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறையில் தட்டிக் கொடுக்கும் ஏற்பாட்டாளர் மற்றும் நன்கொடையாளரைப் பாராட்டிய  எமரெல்ட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தமது பள்ளியின் விளையாட்டு நிலை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

"எங்கள் பள்ளியில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகளே உள்ளனர். அதில் ஒருவரே தமது நேரத்தை செலவழித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணையுடன் பயிற்சியாளரை வரவழைத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். அதுவே மாணவர்களை இந்த அளவிற்கு ஊக்கப்படுத்தியுள்ளது," என்றார் அவர். 

இன்று காலை எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற  'ஜெர்சி' வழங்கும் நிகழ்ச்சியில் ஆறு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)