பொது

மலாயாப் பல்கலைக்கழகத்தின் 38-வது பேரவைக் கதைகள் போட்டி

05/07/2024 08:30 PM

கோலாலம்பூர், 05 ஜூலை (பெர்னாமா) -- படைப்புகளின் மூலமாக தமிழ்ப் படைப்பாளர்களை அங்கீகரித்து அவர்களுக்கு ஆக்கப்பூர்வ உத்வேகத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை. 

இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவோடு, 38-வது ஆண்டாக  நடைபெறவிருக்கும் பேரவைக் கதைகள் போட்டியில் கடந்த காலங்களைப் போன்று, இம்முறையும் புதிய கோணத்திலும் புத்தாக்க சிந்தனையிலுமான தமிழ்ப் படைப்புகளை அதன் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைத்துலக சிறுகதை எழுதும் போட்டியான இந்தப் பேரவைக் கதைகள் போட்டி இம்முறையும் மூன்று பிரிவுகளில் நடத்தப்படுவதாக 38-வது பேரவைக் கதைகள் இயக்குநர் பிரோஷினி சரவணன் தெரிவித்தார். 

எழுத்தாளர்களிடமிருந்து, இம்முறை தற்கால சிந்தனையைச் சார்ந்த முதிர்ச்சியான கதைகளை 38-வது பேரவைக் கதைகள் ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்பார்ப்பதாக பிரோஷினி சரவணன் கூறினார். 

''மாணவர் பிரிவில் நான்காம் படிவம் தொடங்கி உயர்க்கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் வரை பங்கேற்கலாம். பொதுப் பிரிவில், எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள பெரியவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவுகளில் பங்கேற்பவர்கள் மலேசியர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது, அனைத்துலகப் பிரிவு. இதில் வெளிநாட்டினர் கலந்து கொள்ளலாம்,'' என்றார் அவர். 

இவ்வாண்டு நடத்தப்படும் சிறுகதை எழுதும் போட்டியில் பங்கேற்க எந்தவொரு தலைப்பையோ கருப்பொருளையோ ஏற்பாட்டுக் குழு நிர்ணயிக்கவில்லை என்றாலும் ஒருசில உணர்ச்சிவசமிக்க கருத்துகளைத் தவிர்க்குமாறு பிரோஷினி கேட்டுக்கொண்டார். 

''நாட்டு நடப்பு அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய கருப்பொருளைத் தவிர்க்க வேண்டும்,'' என்றார் அவர். 

இதனிடையே, தங்கள் படைப்புகளை அனுப்புவதற்கு முன்பதாகப் போட்டியாளர்கள் அதற்கான மின்னியல் பாரத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மின்னியல் பாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தளங்கள்: 

முகநூல்: https://www.facebook.com/tlsmalaya 

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/tamillanguagesociety/

கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடக்கிய 38-வது பேரவைக் கதைகள் போட்டிக்கு வரும் ஜூலை 26-ஆம் தேதிக்குள் தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று படைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இறுதி நாளுக்குப் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு படைப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதையும் பிரோஷினி குறிப்பிட்டுள்ளார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]