பொது

ஐந்து வயது எட்டு மாத குழந்தையைத் துன்புறுத்திய தாயின் வழக்கு விசாரணை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

20/08/2024 07:58 PM

சுக்கை, 20 ஆகஸ்ட் (பெர்னாமா) --   ஐந்து வயது எட்டு மாத பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தாய் ஒருவர் மீதான விசாரணையைக் கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றம் செப்டம்பர் 12-ஆம் தேதி நிர்ணயித்துள்ளது.

பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள உலு கிந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 26 வயதுடைய நோருல்ஹுடா சோஃபியா முடாவின் மனநல பரிசோதனை அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாததைத் தொடர்ந்து நீதிபதி வான் சுஹைலா முஹமட், இன்று அத்தேதியை நிர்ணயித்தார். 

கடந்த மாதம் ஜூலை 22-ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்‌ஷன் 342-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் மனநலப் பரிசோதனைக்கு அனுமதிக்கும்படி வான் சுஹைலா உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் குழந்தையின் தலைமுடி மற்றும் தலையை இழுத்து, உடலைத் தூக்கி சன்னலின் வெளியே தொங்கவிட்டு துன்புறுத்திய நிலையில் அக்குழந்தையின் உடலில் காயங்களை ஏற்படுத்தியதாக, குழந்தை பராமரிப்பாளருமான நோருல்ஹுடா சோஃபியாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  

கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி, சுக்கை, ஜாபுர் குபுர், கம்போங் ஆயேரில் அமைந்துள்ள வீடொன்றில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது.

2001-ஆம் ஆண்டு குழந்தை பராமரிப்பு சட்டம் செக்‌ஷன் 31 உட்பிரிவு 1-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)