சிறப்புச் செய்தி

கல்வியைக் கடந்து கலையும் வாழ்வியலைப் போதிக்கின்றது

23/08/2024 07:48 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக் காட்டும் கலை நுட்பமானது, உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தின் மூலம்,ஒரு கலைஞரை பிறக்க வைக்கின்றது. 

அதில், இளம் வயது முதலே இசையின் மீது ஏற்பட்ட அலாதி நேசத்தால், வரும் காலத்தில் பெரிய இசை கலைஞராக உருவாக முடியும் என்ற நம்பிக்கையை தமக்குள் விதைத்திருக்கின்றார் 17 வயதுடைய கெல்வின் மோகன்.

கல்வியும் கலையும் வாழ்வியலைப் போதிப்பதால், இரண்டிலுமே தங்கு தடையின்றி தாம் முழுமையாக கவனம் செலுத்தி வருவதோடு தீயவற்றை சிந்திக்காமல், தடமாறாது தனது பதின்ம வயது பருவத்தைக் கழித்து வருவதாகக் கூறுகின்றார் ஷா ஆலாமைச் சேர்ந்த கெல்வின் மோகன்.

''நான் கல்வியையும் இசையையும் எப்போதும் பிரித்து பார்ப்பதில்லை. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதற்கு செலவிட்டால், இரண்டு மணி நேரத்திற்கு இசைப்பயிற்சியை மேற்கொள்வேன். இதனால் படித்த பிறகு ஏற்படக்கூடிய களைப்பு இசை வாசிப்பில் தீர்ந்துவிடும். சொல்லப் போனால் எனக்கு இசையே எப்போதும் நல்ல மருந்தாக உள்ளது. அதனால் எந்த தீய செயலுக்கும் என் வாழ்வில் இடமில்லை,'' என்று தெரிவித்தார்.

சிறுவயது முதல் தனது தந்தை மோகனிடம் இசை கற்றுக் கொண்ட கெல்வினுக்கு கிட்டார், டிராம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தாலும், பியானோ மீதே அதிக காதல் என்று கூறினார். 

வீட்டில் பயிற்சி பெறுவதைத் தவிர்த்து, தேவாலயத்தில் அதிகமான இறைப்பாடல்களை வாசிப்பதால், பியானோ மீது தமக்கு அலாதியான ஆர்வம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அதனால் ஓர் இசைக்கருவி வாசிப்புப் பள்ளியில் இணைந்து ஈராண்டுகளாக பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்ட அவர், கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டுமென்பதற்காக தற்போது தற்காலிகமாக அப்பயிற்சிக்கு செல்லாமல் இருக்கிறார்.

இருந்தபோதிலும், வீட்டில் பியானோ வாசிக்கும் பயிற்சி எடுக்கத் தவறியதில்லை என்று கூறிய கெல்வின், தனது இசை பயணத்தின் இலக்கு குறித்து விவரித்தார்.

''ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் அதற்கு முன்னதாக ஒரு பாடலுக்காவது இசையமைத்து வெளியிட வேண்டுமென்ற இலக்கைக் கொண்டுள்ளேன். பல இசையமைப்பாளர்கள் என்னைக் கவர்ந்திருந்தாலும்ன் என் தந்தையே எனக்கு முதல் ஆசான். அவரிடமிருந்துதான் இன்னமும் நான் இசையின் நுணுக்கங்களைக் கற்று வருகிறேன்,'' என்று கெல்வின் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாட்டுப் போட்டிகள், நடன போட்டிகள் தவிர இசை வாத்தியக் கருவிகள் வாசிக்கும் போட்டிகளோ அல்லது நிகழ்ச்சிகளோ நாட்டில் மிகவும் அரிதாகவே நடப்பதாக கெல்வின் குறைப்பட்டுக்கொண்டார். 

அத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டால் இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளும் தம்மைப் போன்ற பல இளைஞர்களுக்கு அது புதிய விடியலாக இருக்கும் எனவும் தமது  ஆவலை அவர் வெளிப்படுத்தினார்.

''நாட்டில் தற்போது பாடல் மற்றும் ஆடல் போட்டிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இசைக்கலைஞர்களுக்கான போட்டிகளோ அல்லது நிகழ்ச்சிகளோ மிகவும் அரிதாகவே உள்ளது. அவ்வாறான போட்டிகள் நடத்தப்பட்டால் வருங்காலத்தில் இன்னும் அதிகமானோர் இசை கருவி வாசிப்பதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்துவர்,'' என்றார் அவர்.

கல்வியும் கலையும் தமது கண்களாகி  பார்வை தரும் தமது தந்தைக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட கெல்வின்,  அவற்றின் மூலம் தமது எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளப் போவதாக பெர்னாமா செய்திகள்  உடனான கலை சங்கமம் அங்கத்தின் நேர்காணலில் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)