சிறப்புச் செய்தி

இராணுவத்தில் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்

29/08/2024 08:45 PM

கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முக்கியக் கடப்பாட்டை கொண்டிருப்பவர்கள், இராணுவப் படையினர்.

அந்தக் கடப்பாடும் அக்கறையும், வளரும் இளம் தலைமுறையினர் இடையே மேலோங்கி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு உள்ளது.

அந்த வகையில், இளைஞர்கள் ராணுவத்தில் இணைவதற்கு, முனைப்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த முன்னாள் இராணுவ அதிகாரி குணசேகரன் மாரிமுத்தையா, தமது கடந்த கால அனுபவங்களையும் பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்து கொண்டார்.

பேராக், தைப்பிங்கில் பிறந்த குணசேகரன் மாரிமுத்தையா 1979-ஆம் ஆண்டு மலேசிய இராணுவப் படை, ATM-இல் LOGISTIK SUPPLY எனப்படும் தளவாட விநியோகப் பிரிவில் இணைந்தார்.

லான்ஸ் கோப்ரல், சார்ஜன் என்று படிப்படியாக தமது தகுதியை உயர்த்திக் கொண்ட அவர் , இராணுவத்தில் 27 ஆண்டுகள் சேவையாற்றி 2006-ஆம் ஆண்டில் பணி ஓய்வுப் பெற்றார்.

தாம் இராணுவத்தில் இருந்து பணிஓய்வுப் பெற்றிருந்தாலும், வளரும் இளம் தலைமுறையினர் அத்துறையில் ஆர்வம் செலுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார் குணசேகரன்.

''இளைஞர்களை இராணுவத்தில் சேர வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது இன்று அவர்கள் வளரும் சூழ்நிலை வேறு. விவேக தொலைப்பேசி மூலம் நிறைய கற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். முன்னாள் இந்திய முப்படை வீரர்கள் சங்கம் அதற்கு வழிகாட்டியாக உள்ளது,'' என்றார் அவர்.

இளைஞர்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்தினர் இராணுவத்தில் இணையும் வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்ற ஆவல் தமக்கு அதிகம் இருப்பதாக கூட்டரசு பிரதேச கிளையின் முன்னாள் இந்தியர் முப்படை வீரர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பல்கலைக்கழக படிப்பை முடிக்கும் தமது இளைய மகனுக்கும் இராணுவத்தில் இணைவதற்கான ஆர்வம் இருப்பதோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் பெருமையாகக் கூறினார்.

இதனிடையே, இராணுவத்தில் இணைவதால் இளைஞர்களிடையே தேசப்பற்று மேலோங்கும் என்பதை உறுதியாக கூறும் அவர், அது தொடர்பான அனுபவத்தைப் பகிர்கின்றார்.

''1979ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்த உடனேயே டத்தாரான் மெர்டேகாவில் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய பிரிவினருடன் இணைந்து கலந்து கொண்டோம். இன்றைய காலக்கட்டத்தில் அவற்றை செய்தாலும் கடந்த காலங்களைப் போல இருப்பதாக தெரியவில்லை. ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் நான் அதில் கலந்து கொண்டேன்,'' என்றார் அவர்.

நாட்டிற்கு சேவை செய்வது மட்டும் ஒரு இராணுவ அதிகாரியின் கடமையல்ல.

மாறாக, மக்களிடையே தேசப்பற்றைக் கொண்டு சேர்ப்பதில் முக்கிய கடப்பாட்டையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் குணசேகரன்.

இளைஞர்கள் மட்டுமல்லாது சிறார்கள் மத்தியில் சுதந்திரப் பற்றை வளர்ப்பதற்கு இராணுவ அதிகாரி என்ற முறையில் தாம் நிறைய பங்காற்றியிருப்பதையும் அவர் விவரித்தார்.

''ஒவ்வொரு  சுதந்திர தினம் வரும் போது, இராணுவ சீருடையில் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் கொண்டாடுவோம். கொண்டாட்டத்தின் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும் ஆர்வம் செலுத்துவதையும் நாங்கள் கண்டோம். இது அவர்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்க்க செய்கிறது,'' என்றார் அவர்.

எனவே, இளைஞர்கள் இத்துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சுதந்திர தின சிறப்பு நேர்காணலில் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502