பொது

நாடு முழுவதிலும் தேசிய தின கொண்டாட்டத்தில் தேசப்பற்றுடன் கூடிய மக்கள்

31/08/2024 07:40 PM

கோலாலம்பூர், 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 67ஆவது தேசிய தினத்தைக் கொண்டாட்டத்தைக் காணும் வகையில், இன்று காலை ஏழு மணி தொடங்கியே ஜார்ஜ்டவுன், ஜாலான் பாடாங் கோத்தா லாமாவில் 25,000-க்கும் மேற்பட்டோர் குழுமிய வேளையில் 7,190 பேர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

கெடாவில், இன்று காலையில் வானிலை மேகமூட்டமாக இருந்த வேளையிலும், அம்மாநில சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷா தம்பதியரின் தலைமையில் அலோர் ஸ்டார், மேடான் பண்டார் சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காண சுமார் 35,000 பேர் ஒன்று கூடினர்.

பேராக் அளவில் பண்டாரான் ஈப்போ மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் கலந்து கொண்டதுடன் பல்வேறு தரப்பினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அணிவகுப்பையும் கண்டு களித்தனர்.

அதேவேளையில் மலாக்காவில், பெர்சியாரான் ஜாலான் மெர்டேக்கா பண்டார் ஹிலீரில் கனமழையினால் தாமதமாக தொடங்கப்பட்ட தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 50,000 பேர், மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, எட்டாயிரம் பேரை உட்படுத்திய சுமார் 4.8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற அணிவகுப்பை தேசப்பற்றுடன் வரவேற்றனர்.

இவ்வாண்டு ஜோகூர் மாநிலத்தின் மெர்டேக்கா கொண்டாட்ட தளமாக தேர்வு செய்யப்பட்டிருந்த டத்தாரான் செகாமாட்டில் இன்று அதிகாலை ஆறு மணி தொடங்கி கோலாகலமாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம் பேர் கலந்து சிறப்பித்தனர்.

பகாங் மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் அவரின் துணைவியார் தெங்கு அம்புவான் பஹாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோரின் தலைமையில் குவாந்தான், மாநகராண்மைக் கழகத்தின் திடலில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்டத்தில் 65,000 பேர் கலந்து கொண்டனர்.

திரெங்கானுவிலுள்ள கோலா திரெங்கானு ஷாபண்டார் சதுக்கத்தில் இன்று காலை 7.30 மணிக்கு மெர்டேக்கா முழக்கத்துடன் தொடங்கிய தேசிய தினக் கொண்டாட்டத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் கலந்து கொண்டு தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

சபா, கோத்தா கினபாலுவிலுள்ள ஜாலான் துன் ஃபுவாட் ஸ்டீபன்சில் அதிகாலை ஆறு மணிக்கு நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டனர்.

இறுதியாக சரவாக் சிபுவில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பிரதான அங்கமாக நடைபெற்ற 2.4 கிலோமீட்டர் தொலைவிலான மெதுநடையில் சுமார் 10,000 பேர் பங்கேற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)