விளையாட்டு

மாணவிகளை ஊக்குவிக்க காற்பந்து பயிற்சிப் பட்டறை

01/09/2024 08:56 PM

கிள்ளான், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- சிறு பருவம் முதலே பெண்களை குறிப்பாக மாணவிகளைக் காற்பந்து விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில், சாய் யூத் ஃபுட்பால் அகாடமி (SAI YOUTH FOOTBALL ACADEMY)  ஐந்து முதல் 18 வயது வரையிலான மாணவிகளுக்கு ஒருநாள் காற்பந்து பயிற்சி பட்டறையை நேற்று நடத்தியது.

காற்பந்து விளையாட்டில் நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் கிள்ளான் புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்பட்டறையில் சுமார் 50 மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் சாய்கீர்த்தனா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

''இப்பயிற்சி பட்டறையை என்னுடன் இணைந்து தகுதிபெற்ற நான்கு அகாடமிகளைச் சேர்ந்து பெண்களும் ஏற்று நடத்தினர். முதலில் ஒரு நான்கு மணிநேரத்திற்கு மாணவிகளுக்கு காற்பந்து விளையாட்டின் அடிப்படை பயிற்சி குறித்து கற்றுக் கொடுத்தோம். அனைவரும் உற்சாகமாக அதில் கலந்து கொண்டனர். அந்த நான்கு மணிநேரத்திற்குப் பிறகு மினி காற்பந்து விளையாட்டு ஒன்று அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மாணவிகள் முழு மூச்சாக இறங்கி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்,'' என்று அவர் கூறினார்.

மலேசிய இந்திய காற்பந்து சங்கத் தலைவர் KV அன்பானந்தன், பினாங்கு இந்திய காற்பந்து குழுவைச் சேர்ந்த ஶ்ரீ சங்கர் ஆகியோர் இப்பட்டறையில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உற்சாகத்தை வழங்கினர்.

இப்போட்டியை பள்ளித் திடலில் நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமின்றி, பெற்றோர் ஆசிரியர் சங்கமும் முழு ஆதரவு வழங்கியதாக சாய்க்கீர்த்தனா குறிப்பிட்டார்.

''இப்பட்டறை முடிந்து செல்லும் மாணவிகள் காற்பந்து விளையாட்டின் அடிப்படை குறித்து அறிந்து செல்ல வேண்டும் என்பதே எங்களின் முதன்மை நோக்கமாகும். அந்த நோக்கத்தை கலந்து கொண்ட அனைத்து மாணவிகளும் இணைந்து வெற்றியடைய வைத்தனர். இனி தகுந்த பயிற்சியாளரைக் கொண்டு அவர்களுக்கு காற்பந்து பயிற்சி அளித்து ஒரு குழுவை உருவாக்குவதே எங்களின் அடுத்தகட்ட இலக்காகும். அதிலும் இப்பட்டறை வெற்றியடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை செய்வதற்கு நாங்கள் முனைவோம்,'' என்றார் அவர்.

மேலும், தேசிய தினத்தன்று இப்பட்டறை நடைபெற்றதால்,றாதில் கலந்து கொண்ட மாணவிகளின் சிறப்புப் படைப்பொன்றும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததாக, சாய் யூத் ஃபுட்பால் அகாடமியின் தோற்றுநருமாகிய சாய்கீர்த்தனா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)