சிறப்புச் செய்தி

வெளிநாட்டிற்கு பயணமாகும் மலேசியர்கள் கவனத்தோடு செயல்பட வேண்டும்

02/09/2024 08:09 PM

கோலாலம்பூர், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- சுற்றுப் பயணங்களைத் தவிர்த்து, கல்வி, வேலை வாய்ப்பு, வசதியான வாழ்க்கை முறை எனும் ரீதியில் மலேசியர்கள் பலர், வெளிநாடுகளின் மீதான மோகத்தினாலும், ஆர்வத்தினாலும் அங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

அத்தகைய பயணங்களை மேற்கொள்ளும்போது, விமான நிலையத்திலோ, அல்லது வெளிநாடுகளிலோ இருக்கும் தருணங்களில், மலேசியர்கள் கவனக் குறைவால் சில குற்றச்செயல்களில் சிக்கிக் கொள்வது பல நேரங்களில் செய்தியாகி உள்ளது.

எனவே, தேவையற்ற விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, வெளிநாட்டிற்கு பயணமாகும் மலேசியர்கள் பாதுகாப்போடும் கவனத்தோடும் இருக்கும் வழிகள் குறித்து வாராந்திர சட்டம் தெளிவோம் அங்கத்தில் விளக்குகிறார் வழக்கறிஞர் சந்திரன் வேலு.

விமான நிலையங்களில் போதைப் பொருள், நகைகள் உட்பட விலை உயர்ந்த பொருட்கள் வழி கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணிகள் கொண்டுச் செல்லும் கைப்பைகள், துணிப்பைகளில் கடத்தல் பொருள்களை மறைத்து வைத்து எடுத்துச் செல்வது, வரி செலுத்தாத நகைகளை அணிந்துச் செல்வது ஆகிய முறைகளிலும் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்செயல்கள் சம்பந்தப்பட்ட சில பயணிகளுக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும் நடப்பதை, வழக்கறிஞர் சந்திரன் வேலு உதாரணத்துடன் விளக்குகின்றார்.

''போதைப் பொருள் கடத்தல் சம்பவம் மிகப் பெரிய குற்றச்செயலாகும். இச்செயல்களால் அதிகமான மலேசியர்கள் வெளிநாடுகளில் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, வயதாகிவிட்டதால் பொருளைத் தூக்கிச் செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்துவிடுகள் என்று இதர பயணிகள் கூறுவர். அதை உதவி என்று செய்தால் நமக்கு சிக்கல் ஏற்படும்,'' என்றார் அவர்.

இதனிடையே, விமான நிலையத்தில் தெரிந்த அல்லது அறிமுகம் இல்லாத இதர பயணிகளின் உடமைகளையும் பைகளையும் வைத்திருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

''பயணப் பெட்டிகளை பூட்டுப் போட்டுக் கொண்டுச் செல்வது நல்லது. பூட்டு இல்லாத பெட்டிகளில் யார் வேண்டுமானாலும் பொருட்களை வைக்க முடியும். நமது பெட்டிகளில் வைத்துவிட்டப் பின்னர், சோதனையின் போது நம்மிடம் கேட்டால் தெரியாது என்ற பதில் எடுப்படாது. ஒரு நாட்டிற்கு பத்தாயிரம் டாலர்தான் கொண்டுச் செல்வதற்கு அனுமதி என்றால், பயணிகள் இருபதாயிரம் டாலர் கொண்டுச் செல்லும் போது பிரச்சனையாகிவிடும்,'' என்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில், வேலை வாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு பயணிக்கும் மலேசியர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழ்நிலைக்காக வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்பவர்கள், அதன் விதிமுறைகளை அறிந்து பயணம் மேற்கொள்வதே சிறந்தது என்றும் சந்திரன் குறிப்பிட்டார்.

''எந்தவொரு வேலையாக இருந்தாலும் நமது தகுதிக்கு ஏற்ற வேலையா? விளம்பரத்தில் உள்ள படி உண்மையாக வேலை இடம் காலியாக உள்ளதா? என்பதை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதனை, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைத் தெரியாமல் நிறைய பேர் சிக்கிக் கொள்கின்றனர்,'' என்றார் அவர்.

அதேபோன்று, அந்நிய நாட்டினரைச் திருமணம் செய்துக் கொள்ள எண்ணம் கொண்டிருக்கும் மலேசியர்களும், சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகங்களில்
சம்பந்தப்பட்ட நபரின் தகவல்களை அவசியம் கண்டறிய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அதேவேளையில், வெளிநாட்டுகளுக்குச் செல்லும் முன்னர், மலேசியர்கள் தங்களது பாதுகாப்பு நலன் கருதி காப்புறுதி கொண்டிருப்பதும் மிகவும் முக்கியம்.

இதனைத் தவிர்த்து, வெளிநாட்டிற்குச் சென்றவுடன் மலேசியர்கள் எந்தவொரு பிரச்சனையை எதிர்நோக்கினாலும் அங்குள்ள மலேசிய தூதரகத்துடன் தொடர்புக் கொள்ளலாம்.

பயணத்திற்கு முன்னர், மலேசிய தூதரகம் மற்றும் தங்கும் விடுதிகளின் தகவல்கள் மற்றும் தொடர்பு எண்களை பயணிகள் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

எனவே, வெளிநாட்டிற்கு பயணமாகும் மலேசியர்கள் அதன் விதிமுறைகளை தெரிந்துக் கொள்வதோடு, குற்றச்செயல்களில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சந்திரன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502