விளையாட்டு

ஹரிமாவ் மலாயாவின் வளர்ச்சிக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

03/09/2024 05:52 PM

புத்ராஜெயா, 03 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் தேசிய காற்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் வளர்ச்சியை வலுப்படுத்த அரசாங்கம் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கிட்டுள்ளது.

ஹரிமாவ் மலாயாவின் நற்பெயரையும் கௌரவத்தையும் உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சியாக, அணி நிர்வாகம், பயிற்சி மற்றும் விளையாட்டாளர்களின் நலன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கி இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"நான் நிதி அமைச்சிடமிருந்து ஒரு கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும், 50 லட்சம் ரிங்கிட்  நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான உறுதிப்பாட்டைப் பெற்றுள்ளேன். ஆனால், ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் சங்கத்திற்காக அல்ல, மாறாக, ஹரிமாவ் மலாயா அணி, அதன் நிர்வகிப்பாளர், அதன் சிறந்த பயிற்சியாளர்களுக்கு. சில ஆண்டுகளில் ஹரிமாவ் மலாயாவை ஆசியாவின் சிறந்த அணிகளில் ஒன்றாக உருவாக்க முடியும்," என்றார் அவர்.

ஒதுக்கீட்டை நிர்வகிப்பது தொடர்பில் மலேசிய காற்பந்து சங்கம், FAM மற்றும் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ ஆகியோருடன் விரைவில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க நிதி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)