விளையாட்டு

பார்வையற்றவர்களை ஊக்குவிக்கிறது SHOWDOWN டென்னிஸ் போட்டி

08/09/2024 08:33 PM

பிரிக்பீல்ட்ஸ், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  சராசரி மனிதர்களைப் போலவே பார்வையற்றவர்களும் அனைத்துலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குக் கொண்டு சாதனை படைக்க வேண்டும்.

அதனை நோக்கமாகக் கொண்டு KEJOHANAN SHOWDOWN KEBANGSAAN எனும் டென்னிஸ் போட்டி, இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் மலேசிய பார்வையற்றோர் சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த 56 வருடங்களாக பார்வையற்றவர்களுக்குத் தன்னார்வ முறையில் பல விளையாட்டு போட்டிகளைத் தாங்கள் நடத்தி வருவதாக, மலேசிய பார்வையற்றோர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சின்னதம்பி கூறினார்.

அதோடு, இச்சங்கத்தைச் சார்ந்தவர்களும் அனைத்துலக போட்டிகளில் பங்கேற்பதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

''இப்போ ஆசியானில் முதலில் ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறோம். ஆசியானில் மலேசியாதான் நாங்கள் தான் முதலில் ஆரம்பித்துள்ளோம். சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தான் முக்கியத்துவம் கொடுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே, ஆசியான் அளவில் நாங்கள் ஒன்றை ஏற்பாடு செய்ய எண்ணம் கொண்டுள்ளோம்'', என்று கூறினார் மலேசிய பார்வையற்றோர் விளையாட்டு சங்கத்தின் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் சின்னதம்பி.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஜப்பான், சீனா,கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த விளையாட்டுகள் மிகவும் பிரபலமான நிலையில் தற்போது மலேசியாவில் அறிமுகம் கண்டிருப்பது இதுவே முதல் முறை என்கிறார் அச்சங்கத்தின் செயலாளர் மேஜர் கிருஷ்ணன் நம்பியார்.

''இது நாங்கள் மூன்றாவது முறையாக நடத்துகிறோம். 2022-ஆம் ஆண்டில் முதல் போட்டியை நடத்தினோம். ஆக, இது மூன்றாவது முறையாக நடத்தப்படும் தேசிய போட்டி. அனைத்து மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் வந்துள்ளனர். மிகவும் புதிய ஒரு போட்டி விளையாட்டு. மலேசியாவில் முதலில் தொடங்கியிருக்கின்றோம்'' என்று  மலேசிய பார்வையற்றோர் விளையாட்டு சங்கத்தின் செயலாளர் மேஜர் கிருஷ்ணன் நம்பியார் தெரிவித்தார்.

இதனிடையே, தங்களின் மாற்றுத் திறன்கள் மூலம் சாதனை படைக்க வைக்கும் இச்சங்கத்தின் முயற்சியானது தங்களுக்குள் தன்னம்பிக்கையை விதைப்பதாக போட்டியில் கலந்து கொண்ட சிலர் பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

''பதற்றம் சாதாரணமாக இருக்கக் கூடியது. ஆனால், பொருமையாக விளையாட வேண்டியது தான். சந்தோஷமாகவும் உள்ளது. பலதரப்பட்ட உணர்வுகள் உள்ளது'', என்று கூறினார் முஹமட் ஃபைசுல் பின் மட் ஷாம்.

''நாங்கள் பார்வையற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்காமல், மற்றவர்களைப் போலவே செயல்பட வேண்டும் என்று எங்களுக்கும் விளையாட்டு உட்பட மற்ற சலுகைகளைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என மோகன யாஷினி கிருஷ்ணன் நாய்டு கூறினார்.

24 பேருடன், எட்டு குழுக்களில் நடத்தப்பட்ட இப்போட்டியில் KRM B-யும் GTC ELITE-உம் இறுதி சுற்றில் மோதின.

அதில், GTC ELITE, 2024-ஆம் ஆண்டிற்கான சுழற்கிணத்தை வென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)