உலகம்

யாகி: தென் சீனாவில் நால்வர் பலி

08/09/2024 05:54 PM

ஹைனான், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் சனிக்கிழமை வீசிய யாகி சூறாவளியில் சிக்கி நால்வர் உயிரிழந்ததுடன், 95 பேர் காயமடைந்தனர்.

இச்சூறாவளியின் சீற்றத்தால், ஹைனானைச் சுற்றிலும் உள்ள ஐந்து லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் 11-வது சூறாவளி என்று கூறப்படும் யாகி, வெள்ளிக்கிழமை ஹனானிலும் குவாங்டாங்கிலும் இரு நிலச்சரிவுகளை ஏற்படுத்தி மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை, நெடுஞ்சாலை வசதிகள், நீர்ப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து உட்பட ஹைனான் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து திட்டங்களின் இழப்புகள் மொத்தம் பத்து கோடியே 26 லட்சம் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

சூறாவளி காரணமாக மாகாணத் தலைநகரான ஹைக்கோவ்வில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 5,500 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த 400-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததுடன் 32,000 க்கும் மேற்பட்ட வீடுகள் பெருத்த சேதமுற்றுள்ளன.

மற்றுமொரு நிலவரத்தில், வியட்நாமின் வட பகுதியில் கரையைக் கடந்த யாகி சூராவளியில் நால்வர் பலியானதோடு, 78 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை நிலவரப்படி, குவாங் நின்ஹ் பகுதியில் அறுவரையும் ஒரு கப்பலையும் காணவில்லை என்று புகார் கிடைத்துள்ளது.

பெரிய அலைகள் மற்றும் பலத்த காற்றால் ஆளில்லா 13 மீன்பிடி கப்பல்கள் மற்றும் ஆளில்லா ஒரு சுற்றுலா கப்பல் உட்பட 14 கப்பல்கள் கவிழ்ந்துள்ளன.

இதுவரை, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 53 ஆயிரம் குடியிருப்பாளர்கள், குறிப்பாக மீன்வளர்ப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள தற்காலிக வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)