விளையாட்டு

2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது

09/09/2024 05:10 PM

பாரிஸ், 09 செப்டம்பர் (பெர்னாமா) --  உலகத்தரம் வாய்ந்த விளையாட்டாளர்கள் கடுமையான போட்டி, மாற்றுத் திறனாளிகளின் அசாத்திய திறமைகள் என்று பல்வேறு தருணங்களைக் கடந்து 11 நாள்களுக்குப் பிறகு, 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டி இன்று அதிகாலை நிறைவடைந்துள்ளது.

பாரிசின் Stade de France அரங்கில் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரமுகர்களின் வருகையோடும் கலை நிகழச்சிகளோடும் நிரம்பிய நிறைவு விழாவில் பாராலிம்பிக் ஜோதி இறுதியாக அணைக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 28-ஆம் தேதி, 17-வது பாராலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது.

இதில், 168 நாடுகளைச் சேர்ந்த 4,463 வீரர், வீராங்கனைகள், 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்கள் தத்தம் நாடுகளைப் பிரதிநித்து அணிவகுத்து வந்தது, பார்வையாளர்ளால் வரவேற்கப்பட்டது

போட்டியின் தொடக்க விழாவில் ஏற்றப்பட்ட பாராலிம்பிக் கொடி, நிறைவு விழாவில் இறக்கப்பட்டு, பின்னர் அது 2028 லாஸ் ஏஞ்சல்சில் பாராலிம்பிக் போட்டியை ஏற்று நடத்தும் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

பாராலிம்பிக் பதக்க பட்டியலில் 94 தங்கம், 76 வெள்ளி மற்றும் 50 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து ஆறாவது முறையாக ஒட்டுமொத்த வெற்றயாளராக உருவெடுத்தது.

அதைத் தொடர்ந்து கிரேட் பிரிட்டன் 49 தங்கம், 44 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடைத்தைப் பிடிக்க அமெரிக்கா 36 தங்கத்துடன் மூன்றாம் இடத்தை வென்றது.

4 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய மலேசியா இரு தங்கம், இரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் பட்டியலில் 42-வது இடத்தில் போட்டியை முடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)