உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்பிற்கும் ஹரிசுக்கும் இடையில் விவாதம்

11/09/2024 05:41 PM

அமெரிக்கா, 11 செப்டம்பர் (பெர்னாமா) --  அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹரிசுக்கும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனல் டிரம்பிற்கும் இடையில் இன்று விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது, பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் தீவிரமான கருத்துகளை முன்வைத்தனர்.

இந்த விவாதத்தின்போது, இஸ்ரேல்- ஹமாஸ், உக்ரேன்- ரஷியா போர் குறித்தும் தங்களது கருத்துக்களை டிரம்பும் ஹரிசும் முன்வைத்தனர்.

பைடன் நிர்வாகக் காலக்கட்டத்தில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட போதும் தொடர்ச்சியான பணவீக்கம் ஏற்பட்டதாக 78 வயதான டிரம்ப், ஹரிஸை விமர்சித்தார்.

மேலும், பணவீக்கம், அனைத்து தரப்பு மக்களுக்கும் பேரிடராக உருவெடுத்துள்ளத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவருக்கு பதில் தாக்குதல் அளிக்கத் தொடங்கிய ஹரிஸ், கருக்கலைப்பு விவகாரம் தொடங்கி பெண்களுக்கு அவசர சிகிச்சை மறுக்கப்படுவது உட்பட 2022-ஆம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பிற்குத் தடை விதித்திருப்பதால் பாலுறவிற்கு ஆளாகும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைத்து வாதிட்டார்.

நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்துதல், சுற்றுச்சூழல் விதிமுறைகளை நீக்குதல் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மாநில எல்லைகளுக்குள் அனுப்புவதை சட்டவிரோதமாக்கும் பழமைவாத கொள்கை திட்டமான Project 2025 உடன் டிரம்பைத் தொடர்புப்படுத்தவும் ஹரிஸ் முயன்றார்.

இந்த விவாதத்தின் இறுதியில் டிரம்ப் கடந்த காலம் குறித்து கோடி காட்ட, ஹரிஸ் ​​எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவ தன்னிடம் திட்டங்கள் இருப்பதாகவும் ஹரிஸ் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)