உலகம்

நைஜீரியா வெள்ளம்; 80% அதிகமான மிருகங்கள் பலி

11/09/2024 06:53 PM

மைதுகுரி, 11 செப்டம்பர் (பெர்னாமா) --  நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்குள்ள மிகப் பெரிய விலங்கியல் பூங்கா, சண்டா கியாரிமி பூங்காவில் உள்ள 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மிருகங்கள் பலியாகி உள்ளன.

அதிகமான வன விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக போர்னோ மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த விலங்கியல் பூங்காவின் அதிகாரத் தரப்பு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

அதோடு, முதலைகள், பாம்புகள் போன்ற விலங்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாதா வட்டாரம் 

தென் மொராக்கோவில், தாதா, திஸ்னிட், எர்ராச்சிடியா, திங்ஹிர் மற்றும் தாரோடண்ட் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததினால் குறைந்தது நால்வரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வெள்ளத்தினால் இதுவரை 56 வீடுகள் அழிந்துள்ள நிலையில், 110 சாலைகள் சேதமடைந்ததோடு, மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெற்கு காசாவில், இஸ்ரேலிய தரப்பு நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது என்றும் அவர் சாடி இருக்கின்றார்.

இஸ்லாமாபாத்

நள்ளிரவு நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நான்கு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய போலீஸ் தரப்பு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, PTI கட்சி பெரிய அரசியல் கூட்டத்தை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)