சிறப்புச் செய்தி

மருத்துவர் அஸ்ரி ரங்காவிற்கு மனிதநேய விருது வழங்கி கௌரவிப்பு

16/09/2024 07:43 PM

கோலாலம்பூர், 16 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த 28 ஆண்டுகளாக அரசாங்க மருத்துவமனையில் சேவையாற்றி இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ANGIOPLASTY AND STENT PLACEMENT எனப்படும், இதயத்தின் அருகிலுள்ள இரத்தக் குழாய் அடைப்பினை சரி செய்ய உதவுவதற்கான அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் டத்தோ டாக்டர் அஸ்ரி ரங்கா அப்துல்லா இராமையா.

B40 குழுவினர் மட்டுமின்றி, தம்மை நாடி வரும் அனைவரையும் கனிவோடு அணுகி இருதயம் தொடர்பில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு கண்டுவரும் இவரின் மருத்துவ சேவையைப் போற்றும் வகையில் நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற மஇகாவின் 78ஆவது பொதுப் பேரவையில் அவருக்கு மனிதநேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு சரவாக் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக தமது பணியைத் தொடங்கிய டத்தோ டாக்டர் அஸ்ரி, தற்போது செர்டாங் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

தமது 28 ஆண்டுகால மருத்துவச் சேவையில், கடந்த 14 ஆண்டுகளாக இருதய சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் அஸ்ரி, சுகாதார அமைச்சின் கீழ் சிலாங்கூர் மாநில இருதய சிகிச்சைப் பிரிவு தலைவராகவும் தேசிய அளவில் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

''நாட்டிலுள்ள பெரும்பாலானவர்கள் இருதயக் கோளாறு நோயினால் அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய செர்டாங் மருத்துவமனையில் பெரிய மருத்துவக் குழுசெயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 70 முதல் 80 வரையிலான என்ஜியோ சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல கடந்தாண்டு மட்டும் நான்காயிரத்திற்கும் மேலான ஸ்டேன் பொருத்தும் சிகிச்சை முறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்று அவர் கூறினார்.

நாட்டின் முதன்மை உயர்க்கொல்லி நோயாக விளங்கும் இருதயம் சார்ந்த பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்க மருத்துவமனைக்கோ அல்லது சிகிச்சையகத்திற்கோ சென்றால் அங்கு காத்திருப்பு பட்டியல் மிக நீளமாக உள்ளதாக அவர்கள் வருந்துகின்றனர்.

இதன் பொருட்டு, அரசாங்க மருத்துவமனைகளில் குறிப்பாக இருதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றான செர்டாங் மருத்துவமனையின் கார்த்திருப்பு நேரத்தைக் குறைத்து மிக விரைவில் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வழங்கும் முயற்சியில் தாமும் களமிறங்கியுள்ளதாக டாக்டர் அஸ்ரி கூறினார்.

''முடிந்தவரை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக சிகிச்சையை முடிக்க திட்டமிடுகிறோம். இதனால் மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சைக்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் பொருட்டு இவ்வகை சிகிச்சைகளுக்காக பதிந்து கொண்டவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. இதுதான் நமது சுகாதார அமைச்சரின் திட்டமாகவும் உள்ளது,'' என்றார் அவர்.

இதனிடையே, மஇகாவுடன் தாம் நீண்ட கால நல்லுறவைக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், தமது பல்வேறு முயற்சிக்கு அக்கட்சியின் தலைமைத்துவம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி வருவதையும் கோடிகாட்டினார்.

அதேவேளையில் தமது சேவைக்கு மதிப்பளித்து இவ்விருதை துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் தலைமையில் வழங்கிய மஇகாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக...

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சுகாதார பாதுகாப்பை கண்காணிப்பவருமான டாக்டர் அஸ்ரி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)