பொது

9 கோடியே 54 லட்சம் ரிங்கிட் மித்ரா நிதி விநியோகிக்கப்பட்டுவிட்டது

17/09/2024 06:33 PM

புத்ராஜெயா, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு இவ்வாண்டு அரசாங்கம் வழங்கிய பத்து கோடி ரிங்கிட்டில் ஒன்பது கோடியே 54 லட்சம் ரிங்கிட் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 40 லட்சம் ரிங்கிட் நிதி அடுத்த மாதம் முழுமையாக விநியோகிக்கப்படும் என்று மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

"ஒன்பது கோடியே 54 லட்சம் ரிங்கிட்டுக்கான நிதி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இம்மாதம் நாங்கள் அந்நிதியை அங்கீகரிக்கும்  அரசாங்கத்தின் பிற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தொடங்குவோம். எஞ்சியுள்ள 40 லட்சம் ரிங்கிட்டை அடுத்த மாதத்தில் விநியோகிப்போம். அதற்கான திட்டமும் எங்களிடம் ஏற்கனவே உள்ளது,'' என்று அவர் கூறினார்.

அதேவேளையில், மக்கள் பிரதிநிதிகளின் மூலமாக, மித்ராவின் அனைத்து நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமது தரப்பு குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

" மித்ராவில் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று நான் நம்புகின்றேன். அதனால் எங்களின் திட்டங்களையும் நாங்கள் அவர்களிடம் பகிர்ந்துள்ளோம். அவர்கள் தங்களின் பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக பி40 பிரிவினரிடம் இத்திட்டத்தை கொண்டு செல்வார்கள் என்று நான் நினைக்கின்றேன். அதேபோல 2025ஆம் ஆண்டு கிரான்ட் திட்டமும் இவ்வாண்டு திறக்கப்படுகின்றது. அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை இவ்வாய்ப்பு அமலில் இருக்கும்,'' என்றார் அவர்.

மித்ராவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு PPSMI எனப்படும் இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் இணைவதற்கு அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை முன்வரலாம்.

இம்முறை சில கடுமையான சட்டவிதிகள் அதில் இடம்பெற்றுள்ள வேளையில், அவ்விதிமுறைகளை விண்ணப்பதாரர்கள் முறையாகப் பின்பற்றினால் மட்டுமே நிதி  வழங்கப்படும் என்று பிரபாகரன் விவரித்தார்.

இதனிடையே, இன்றைய கூட்டத்தில் சில துணையமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்ட வேளையில், அதில் மித்ரா எதிர்கொள்ளும் சில சவால்கள், குறிப்பாக நிதி பற்றாக்குறை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

"மித்ராவில் வழங்கப்படும் நிதியில் சமூகநல உதவிகளுக்கே ஆறு கோடி ரிங்கிட் முடிந்துவிடுகிறது. இதர நிதியே உருமாற்றப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. எங்களின் தரவுப்படி சுமார் ஏழு லட்சம் பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள் இருக்கும் நிலையிலே அவர்களுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உருமாற்றுப் பணிக்கான தேவைகள் இருந்தும் நிதி பற்றாக்குறையால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை,'' என்று அவர் கூறினார்.

எனவே, வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மித்ராவிற்கு 30 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை கோரவிருப்பதாக பிரபாகரன் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற, மித்ரா சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு தலைமமையேற்ற பின்னர் செய்தியாளிடம் பேசிய அவர் அத்தகவல்களை வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)