பொது

கெடாவிற்கு பிரதமர் உதவி நிதி; மந்திரி புசார் சனுசி நன்றி பாராட்டினார்

22/09/2024 06:15 PM

அலோர் ஸ்டார், 22 செப்டம்பர் (பெர்னாமா) -- கெடாவில் வெள்ளத்திற்குப் பிந்தைய உதவி நிதியாக ஒரு கோடியே 30 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் நன்றி தெரிவித்துள்ளார். 

சேதமடைந்த உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உதவி செய்யவும், சேதமடைந்த குடியிருப்பாளர்களின் வீடுகளை மறுசீரமைக்கவும் இந்நிதி மாநில அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று சனுசி கூறினார்.

நேற்று, அலோர் ஸ்டாரில் உள்ள கெடா தேசிய சமய இடைநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பிரதமர், உதவித் தொகை வழங்குதல், துப்புரவுப் பணிகள் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றிற்கு உதவும் வகையில் அந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலி நிவாரண மையங்களில் தங்கி இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் முதற்கட்ட உதவித் தொகையாக ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் அறிவித்ததாகக் கூறிய சனுசி, இதுவரை ஈராயிரம் குடும்பத் தலைவர்கள் அதை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இம்முறை வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 2010ஆம் ஆண்டைப் போல் மோசமான பதிவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று, பெண்டாங், தானா மேரா இடைநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும்  தற்காலிகமாக நிவாரண மையத்தை பார்வையிட்ட பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)