சிறப்புச் செய்தி

சிறுநீரகத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்

25/09/2024 08:12 PM

கோலாலம்பூர், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- மனித உடலின் மிக முக்கியமான உறுப்புக்களில் சிறுநீரகமும் ஒன்றாகும்.

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் அவை பழுதடைந்தால், உடல் நலத்தில் மோசமான பாதிப்பு ஏற்பட்டு மரணம் கூட விளையலாம்.

உடலில் உள்ள கழிவுப் பொருட்களைக் ரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றார் சிறுநீரக நிபுணர் டாக்டர் ரவி சுப்ரமணியம்.

2022-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பிடின் படி மலேசியாவில், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறுநீரகம் செயலிழந்து சுத்திகரிப்பு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை சிறியதல்ல.

2030-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக காட்டும் ஆய்வுகள் தொடர்பில், டாக்டர் ரவி சுப்ரமணியம் கவலை தெரிவித்தார்.

விஷத்தன்மை கொண்டது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திரவங்கள் போன்றவற்றை அகற்றி நீரின் சமநிலையைப் பாதுகாத்து, தாது உப்புக்கள், மற்றும் இதர இரசாயனங்களின் அளவை உடலுக்குள் சிறுநீரகம் பாதுகாத்து வருகிறது.

தினசரி குடிக்கும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ப சிறுநீரகம் வழி கழிவுப் பொருட்கள் வெளியாகும்.

இவ்வாறு, உடலின் முக்கிய உறுப்புகாக இருக்கும் சிறுநீரகம் இன்றைய காலக்கட்டத்தில் பெரிதளவில் பாதிகப்படுவதற்கான காரணங்களை டாக்டர் ரவி விளக்குகின்றார்.

''இன்றைய காலக்கட்டத்தில் உலகளவிலும் மலேசியாவிலும் நீரிழிவு நோய் சிறுநீரக செயலிழப்பிற்கு 90 விழுக்காடு காரணமாகின்றது. உடலில் இனிப்பின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரகத்தை பாதிக்கும். அடுத்ததாக, இரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தால் அதாவது 140,150, 180 மற்றும் 200-க்கும் அதிகமாக இருந்தால் சிறுநீரகத்தை பாதித்து சுறுக்கிவிடும்,'' என்றார் அவர்.


சிறுநீரகங்களின் மிக முக்கிய வேலை, உடலுக்குள் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவது ஆகும்.

எனவே, உடலகுக்கு ஒவ்வாதா, அவசியமில்லா மாத்திரைகள் உட்கொள்வதும் சில நாட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவதும் சிறுநீரகத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை டாக்டர் ரவி பகிர்ந்து கொண்டார்.

''ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். அது 1 1/2 லீட்டர். அடுத்தது ஆரோக்கியமான வாழ்க்கை. ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம். மூன்றாவதாக, நல்ல உணவு. உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். நல்ல உணவை உட்கொள்ள வேண்டும். நிறைய காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். இறைச்சி வகைகளை (red meats) குறைந்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

அதேவேளையில், தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு இரு முறை ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்று டாக்டர் ரவி அறிவுறுத்தினார்.

''அதே போன்று, நீரழிவு மற்றும் ரத்தம் அழுத்தம் உள்ள நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் அதனை சரி செய்ய மூன்று வழிகள் உள்ளன. முதலாவது hemodialysis, (ரத்தம் கழுவுவது), Continuous Ambulatory Peritoneal Dialysis (தண்ணீர் கழுவுவது) மற்றும் kidney transplant (சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை). மக்கள் சிறுநீரகத்தை செயலிழக்காமல் கவனித்துக் கொள்வது முக்கியம்.),'' என்றார் அவர்.

எனவே, சிறுநீரக மருத்துவ நிபுணர்களை அணுகி தங்களின் நிலைக் குறித்து தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை முறைகளைப் பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதை டாக்டர் ரவி, இன்றைய நலம் வாழ அங்கத்தில் பகிர்ந்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)