சிறப்புச் செய்தி

மூளை, இருதயத்தை பாதிக்கும் மின்காந்த அதிர்வுகளும் கதிர்வீச்சும் 

02/10/2024 06:25 PM

கோலாலம்பூர், 02 அக்டோபர் (பெர்னாமா) -- ELECTRO MAGNETIC WAVE AND RADIATION எனப்படும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அதிர்வுகளும் கதிர்வீச்சும் மூளையையும் இருதயத்தையும் மெல்ல மெல்ல பாதிப்பதாக மருத்துவ உலகம் கூறுகின்றது.

இந்த மின்காந்த அதிர்வுகளும் கதிர்வீச்சும் வீட்டில் பயன்படுத்தப்படும் சில மின்சார சாதனங்களில் காணப்பட்டாலும் தற்போது தொலைத்தொடர்பு சாதனங்களான கைப்பேசி, மடிக்கணினி, TAB எனும் கணிப்பலகை ஆகியவற்றில் அவை அதிகம் வெளிப்படுவதாக மலேசிய வாழ்வியல் மருத்துவ சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் டினேஷ் சின்னதம்பி தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக நாளொன்றுக்கு 17 முதல் 20 நிமிடங்கள் வரை ஒருவர் கைப்பேசியைப் பயன்படுத்தினால் அடுத்த பத்தாண்டுகளில் அவருக்கு மூளைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

''குறிப்பாக கைப்பேசியைக் கூறலாம். இன்றைய சூழ்நிலையில் கைப்பேசி இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் பலரின் வாழ்க்கையில் அது ஒன்றித்துவிட்டது. அதைத் தொடர்ந்து டிவி, WIFI ROUTERS, LED விளக்கு ஆகியவற்றுடன் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான MICROWAVE OVEN எனப்படும் நுண்ணவை சாதனம் ஆகியவை அதிகளவிலான கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன,'' என்று அவர் தெரிவித்தார். 

இத்தகைய  மின்காந்த அதிர்வுகளும் அதன் மூலமாக வெளிப்படும் கதிர்வீச்சுகளும் மருத்துவ உபகரணங்களான CITY SCAN, X - RAY, M-R-I ஆகியற்றில் காணப்பட்டாலும்...

அவற்றைக் காட்டிலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் வழி எழும் கதிர்வீச்சுகள் அதிக ஆபத்தைக் கொண்டது என்று அவர் விவரித்தார்.

மேலும், சில பிரதான மின்சார சாதனங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் அவர் இவ்வாறு விவரித்தார். 

''மனித உடல்களில் குறிப்பாக இருதயமானாலும் அல்லது மூளையானாலும் அதற்கு ஏற்றாற் போல அவ்வுறுப்பு இயங்கக்கூடும். கடந்த காலங்களைக் காட்டிலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின்காந்த அதிர்வுகளும் கதிர்வீச்சும் மனிதர்களை எளிதாக பாதிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாகவே உள்ளது, '' என்று அவர் குறிப்பிட்டார்.

கைப்பேசி என்பது மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான கருவியாக இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து எழும் மின்காந்த அதிர்வுகள், மனிதரை தாக்காமல் இருக்கும் வழிமுறைகள் குறித்தும் டாக்டர் டினேஷ் விளக்கம் அளித்தார்.

''நாம் உறங்கும் அறையில் WIFI ROUTERS இருந்தால் முடிந்தவரை அதை அங்கிருந்து வேறு அறைக்கு மாற்ற வேண்டும். உறங்கும் போது நமது கைப்பேசி குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தில் இருப்பது மிகவும் நல்லது. முடிந்தால் கைப்பெசியின் 3G முறையை அடைத்து வைப்பது விவேகமானது,'' என்றார் அவர்.

அதோடு, வீட்டில் தொலைக்காட்சியை தூரத்திலிருந்து பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு பெரியவர்களைக் காட்டிலும் சிறுபிள்ளைகளையே அதிகம் பாதிப்பதாகவும் நினைவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, வீட்டில் பிள்ளைகளுக்கு கைப்பேசி, கணிப்பலகை போன்ற சாதனங்களைக் கொடுக்கும் பழக்கத்தையும் பெற்றோர்கள் குறைத்துக் கொள்வதும் நல்லது என்று 'நலம் வாழ' அங்கத்தில் டாக்டர் டினேஷ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)