பொது

மலாய் மொழியின் பயன்பாட்டை குறைத்து மதிப்பிடும் தரப்பினரை கண்டித்தார் பிரதமர்

06/10/2024 03:58 PM

ஈப்போ , 06 அக்டோபர் (பெர்னாமா)  - நாட்டின் தேசிய மொழியான மலாய் மொழியின் பயன்பாட்டை குறைத்து மதிப்பிட்டு, ஆங்கில மொழியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சில தரப்பினரை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார்.

ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் அத்தரப்பினரின் அணுகுமுறை தவறானது என்று அவர் கூறினார்.

“அவர்கள் ஆங்கிலத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அவர்கள் லண்டனில் வளர்ந்திருக்கலாம். ஆனால், நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அவர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள். அனைத்து மலேசியர்களின் விருப்பத்தையும் ஆசைகளையும் அவர்கள் பிரதிநிதிக்க வேண்டும்,''  என்றார் அவர்.

இன்று, தேசிய அளவிலான 2024-ஆம் ஆண்டு தேசிய மொழி மாதத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில், நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

இந்நாட்டு மக்கள் மொழி தொடர்பான முரண்பாடுகளை மறந்து, மலாய் மொழியை வலுவூட்டுவதற்கான நிலைப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேராக் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ சரானி முஹ்மட், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்ஷூல் அஸ்ரி அபு பாகார் மற்றும் DEWAN BAHASA DAN PUSTAKA, DBP-யின் தலைமை இயக்குநர் டாக்டர் அசாமி ஜஹாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)