பொது

புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கலாச்சாரம் மாறாத சரஸ்வதி பூஜை

11/10/2024 07:31 PM

கிள்ளான், 11 அக்டோபர் (பெர்னாமா) -- செல்வத்தை வழங்கும் லட்சுமியையும் வீரத்தை வழங்கும் சக்தியையும் வணங்கும் நவராத்திரி தினங்களில் கடைசி மூன்று நாட்கள் ஞானத்தை கொடுக்கும் சரஸ்வதிக்கு உகந்ததாகும். 

கல்வி, கலைகளில் தேர்ச்சியும் ஞானமும் அடைவதற்கும், முப்பெருந்தேவியரில் ஒருவரான கலைமகளின் ஆசியைப் பெறுவதற்கும் இன்றைய தினத்தில் பள்ளிகளிலும் வீடுகளிலும் சரஸ்வதி பூஜை, சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெறும்.

அதில் சிலாங்கூர் கிள்ளான், புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சமயமும் கலாச்சாரமும் மாறாது, சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

கலைவாணிக்கு புகழ் சூட்டும் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவதற்கு புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலாச்சார உடையில் காலை ஏழு மணி முதல் வருகை புரியத் தொடங்கினர்.

சபைக் கூடலுக்குப் பின்னர் காலை மணி ஒன்பது அளவில் ஓமம் வளர்த்து, பள்ளி மண்டபத்தில் சரஸ்வதி பூஜை இனிதே தொடங்கியது.

பள்ளியின் தலைமையாசிரியர் சிவமலர் பழனி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பூஜையில் இதர ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர்.

"இவ்வாண்டு நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களுக்கு பள்ளியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கலை, கலாச்சாரத்துடன் சமய அறிவையையும் மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு வழங்கினர்," என்று அவர் கூறினார்.

மேலும், மாணவர்களிடையே, சமயத்தையும் கலாச்சாரத்தையும் வளக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, சரஸ்தி பூஜையின் புரிதல் குறித்து சில மாணவர்கள் இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.

"சரஸ்வதி தேவியிடம் மனதார வேண்டினால் அவர் நமக்கு கல்வியறிவைத் தருவார். இன்னும் மாணவர்களின் கல்வி தொடர்பான இதர வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார். இறைவன் அருளால் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டினோம்," என்று மஹாஷினி புவனேசன், கௌசல்யா லெட்சுமணன், காவியா மனிக்‌ஷா ஆகியோர் தெரிவித்தனர்.  

பூஜைக்குப் பின்னர் மாணவர்களின் கலைப் படைப்பும் இடம்பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)