பொது

47 கும்பல்களின் கடத்தல்  நடவடிக்கைகள் முறியடிப்பு

16/10/2024 06:04 PM

கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- இவ்வாண்டு அக்டோபர் வரையில் மலேசிய குடிநுழைவுத் துறை JIM, அரச மலேசிய போலீஸ் படை PDRM, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM மற்றும் இதர அமலாக்க நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சோதனைகளின் வழியாக அந்நிய தொழிலாளர்கள் கடத்தலில் ஈடுபட்ட 47 கும்பல்களின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத அந்நிய குடியேறிகள் உட்பட அக்கும்பலின் உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 1,285 பேர் இச்சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

"இவ்வாண்டு அக்டோபர் வரை, கூட்டு முயற்சியில் மலேசிய குடிநுழைவுத் துறை மற்றும் பல்வேறு அமலாக்கா நிறுவனங்கள், 47 கும்பல்களை முறியடித்துள்ளன. கும்பல் உறுப்பினர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் 1285 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த ஒத்துழைப்பின் விளைவாக 47 கும்பல்கள் நடவடிக்கை முறியடிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் அந்நிய நாட்டினரை நாட்டிற்கு அழைத்து வரும் கும்பல்களின் நடவடிக்கைகளைக் கையாளுவதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து,  கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் எழுப்பிய கேள்விக்கு  சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு பதிலளித்தார்.

தகுதியான நபர்கள் மட்டும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதை உறுதிச் செய்ய குடிநுழைவு துறை முகப்புகளில் கட்டுப்பாடும் கடுமையாகக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)