விளையாட்டு

பலோன் டி'ஓர் விருதை வென்றார் ரோட்ரி

29/10/2024 04:26 PM

கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- சிறந்த காற்பந்து ஆட்டக்காரருக்கான பலோன் டி'ஓர் விருதை, மென்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ரோட்ரி வென்றிருக்கின்றார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை மென்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக நான்கு முறை கைப்பற்றிருக்கும் வேளையில், அதனை வெல்வதற்கு ரோட்ரி மிகவும் துணையாக இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதினை ஒரு தற்காப்பு மத்திய திடல் ஆட்டக்காரருக்கு வழங்குவது சற்று ஆச்சரியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, ரியல் மெட்ரிட் கிளப் இந்த விழாவை முழுமையாக புறக்கணித்துள்ளது.

கடந்த பருவத்தில் இ.பி.எல் பட்டத்தை வெல்வதற்கு ஆர்செனல் முனைப்பு காட்டிய நிலையில், அதனை முறியடித்து மென்செஸ்டர் சிட்டிக்கு அக்கிண்ணத்தை வென்று தந்ததில், 28 வயதுடைய ரோட்ரி முக்கிய பங்கு வகித்தார்.

அதோடு, ஸ்பெயினின் ஆட்டக்காரரான அவர், யூரோ 2024 காற்பந்து போட்டியின் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்வானார்.

இதனிடையே, பெண்கள் பிரிவில், பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் நட்சத்திரமான ஐத்தானா பொன்மத்தி பலோன் டி'ஓர் விருதைக் கைப்பற்றினார்.

இவ்விருதினை தமது கிளப் நான்காவது முறையாக பெற்றிருக்கும் வேளையில், பொன்மத்தி இரண்டாவது முறையாக அதனை வென்றுள்ளார்.

பலோன் டி'ஓர் வெற்றியாளர்கள் 100 நிபுணத்துவ பத்திரிகையாளர்களைக் கொண்ட அனைத்துலக நடுவர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)