விளையாட்டு

யூகோ ஹம்பர்ட் - அலெக்சாண்டர் ஸ்வெரெவ் நேரடி மோதல்

03/11/2024 06:07 PM

பாரிஸ், 03 நவம்பர் (பெர்னாமா) -- பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு உபசரணை நாட்டின் யூகோ ஹம்பர்ட் தேர்வாகியுள்ளார்.

இன்று இரவு நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில்,யூகோ ஹம்பர்ட், அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வுடன் மோதவுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில், யூகோ ஹம்பர்ட் கரேன் கச்சனோவுடன் விளையாடினார்.

முதல் செட்டில் 6-7 என்ற புள்ளிகளில் யூகோ ஹம்பர்ட் தோல்வி கண்டாலும் அடுத்த இரண்டு செட்களில் அவர் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாம் செட்டில் 6-4 எனும் புள்ளிகளில் வென்ற ஹம்பர்ட், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டை 6-3 என்ற புள்ளிகளில் கைப்பற்றி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.

2018ஆம் ஆண்டு பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளரான கரேன் கச்சனோவை தோற்கடித்து ஹம்பர்ட் தமது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், முன்னாள் வெற்றியாளர் ஹோல்கர் ரூனுடன் விளையாடினார்.

6-3 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இந்த அரையிறுதி ஆட்டத்தை எளிதாக தன் வசம் ஆக்கினார்.

இந்த வெற்றியின் மூலம், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 27 வயதான ஸ்வெரெவ், மீண்டும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)