சண்டிகர், 05 நவம்பர் (பெர்னாமா) -- கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில், கனடிய அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
சீக்கிய பிரிவினைவாதிகளால் தங்கள் சமூகத்திற்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் கோரி, சண்டிகாரில் இந்து குழு ஒன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.
பிராம்ப்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வன்முறை வெடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவது ஒவ்வொரு கனடியரின் உரிமை என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தமது X பதிவில் குறிப்பிட்டார்.
********************************************************************************************************************
கான்பெரா, ஆஸ்திரேலியா
கனடாவில் இந்து ஆலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டிருக்கும் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
"கனடாவில் உள்ள இந்து கோவிலில் நேற்று நடந்த சம்பவம் மிகுந்த கவலைக்குரியது என்று நினைக்கின்றேன். எங்கள் அதிகாரப்பூர்வப் பேச்சாளரின் அறிக்கையை நீங்கள் முதலில் பார்த்திருப்பீர்கள். இதன் தொடர்பில் எங்கள் பிரதமரும் நேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே, இவ்விவகாரம் குறித்து நாங்கள் எவ்வளவு வருந்துகிறோம் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய தலைநகர் கென்பெராவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வாறு குறிப்பிட்டார்.
கனடாவில் 2023 இல் ஒரு சீக்கிய பிரிவினைவாதத் தலைவரைக் கொன்றதுடன் தொடர்புபடுத்தி, ஒட்டாவா ஆறு இந்திய தூதர்களை வெளியேற்றிய சில வாரங்களுக்குப் பிறகு நேற்று இச்சம்பவம் நடந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)