பொது

இளைஞர்கள் மன அழுத்தத்துடன் உள்ளனர் - இளைஞர் மனநலக் குறியீடு பதிவு 

05/11/2024 06:50 PM

கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய இளைஞர் மனநலக் குறியீடு 2023ஆம் ஆண்டு மிதமான அளவில் அதாவது 71.91-ஆக பதிவாகியுள்ளது. 

இளைஞர்களிடையே சுற்றுச்சூழல், சமூக ஆதரவு மனநல ஆரோக்கியம் ஆகியவற்றில், இளைஞர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை இக்குறியீடு காட்டுவதாக, துணைப் பிரதமரும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரவை செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

இவ்விவகாரத்தை முறையாகக் கையாளத் தவறினால் அது மலேசிய இளைஞர்களிடையே தீவிரமான மனநலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று சாஹிட் நினைவுறுத்தினார்.

"இணையப் பகடிவதை, தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை தொடர்பான சிக்கல்கள் உட்பட பல வெளிப்புற காரணங்களால் இவ்விவகாரம் தலைத்தூக்குகிறது. மேலும் இந்நிலைமையை ஏற்படுத்தும் ஏழு காரணங்களும் உள்ளன," என்றார் அவர்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அதன் செயற்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

இச்செயற்குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹமட்  மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

அக்கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட பரிந்துரைகளில், குறிப்பாக இளைஞர்களின் மனநலப் பிரச்சனைகளைக் கையாளும், பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அமைச்சு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின்  விரிவான முனைப்பும் அதில் அடங்கும் என்று சாஹிட் ஹமிட் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)