கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- 2024 / 2025 சூப்பர் லீக் கிண்ணம்..
வரும் ஞாயிற்றுக்கிழமை மஞ்சோங் நகராண்மை கழக அரங்கில் நடைபெறவிருந்த நடப்பு வெற்றியாளர் ஜோகூரின் ஜேடிதி மற்றும் பேராக் எஃப்சி-க்கும் இடையிலான ஆட்டம் ஜோகூர் சுல்தான் அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி ஆட்டத்தை வேறோர் அரங்கில் நடத்தும்படி பேராக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகமலேசிய காற்பந்து லீக் MFL அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட போட்டிக்கான இடத்தை சுல்தான் இப்ராஹிம் அரங்கை, பேராக் எஃப்சி-க்கும் முன்மொழிந்ததாக MFL தெரிவித்துள்ளது.
MFL-லின் கோரிக்கையானது இப்பருவத்தில் லீக் அட்டவணையை மேலும் தாமதப்படுத்தக்கூடிய அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க கூடியதாகும்.
முன்னதாக, ஆகஸ்ட் 17 மற்றும் அக்டோபர் 5 ஆம் தேதிகளில் ஜேடிதி உடன் பேராக்
எஃப்சி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கனமழையின் காரணமாக அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நிர்வாகி ஹெக்டர் பிடோகிலியோ கீழ் ஜேடிதி தற்போது 13 போட்டிகளுக்குப் பிறகு 37 புள்ளிகளுடன் லீக் கட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.
எட்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சிலாங்கூர் எஃப்சி இரண்டாவது இடத்திலும், 17 புள்ளிகளுடன் பேராக் எஃப்சி ஏழாவது இடத்திலும் இருக்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)