வலென்சியா, 11 நவம்பர் (பெர்னாமா) -- ஸ்பெயினின் வலென்சியாவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
220-க்கும் மேலானவர்கள் பலியான நாட்டின் மோசமான வெள்ளப் பெருக்கை, அதிகாரிகள் கையாண்ட விதத்திற்கு எதிராக அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சில பத்தாண்டுளில் ஐரோப்பாவின் மோசமான இயற்கைப் பேரிடர்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஸ்பெயினின் கூட்டரசு அரசாங்கத்தின் தலைவர் கார்லோஸ் மேசனைப் பதவி விலகுமாறு முழங்கினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேசன் அபாய எச்சரிக்கை அறிக்கை மிகவும் தாமதமாக அதாவது கடந்த அக்டோபர் 29ஆம் தேதிதான் வெளியிட்டதாக அவர்கள் புகார் கூறினர்.
அதன் பிறகுதான் அருகிலுள்ள புறநகர்ப் பகுதி மற்றும் கிராமங்களில் நீர் புகத் தொடங்கியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாடினர்.
இது குறித்து பின்னர் அறிக்கை வெளியிட்ட வலென்சியாவின் தலைவர், நிலைமையின் தீவிரம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தால், முன்னரே எச்சரிக்கை விடுத்திருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
அமைதியான முறையில் வந்திருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிலர் மாநகராண்மைக்கழக கட்டடத்தின் மீது கற்களை வீசி சிறு சேதங்களை ஏற்படுத்தியதாக போலீசார் கூறினர்.
இதனிடையே, ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் ஏறக்குறைய 80 பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)