வாஷிங்டன், 13 நவம்பர் (பெர்னாமா) -- இலான் மஸ்க்கும், குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமியும், புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அரசின் ஆக்கப்பூர்வத் துறைக்கு தலைமை ஏற்கவிருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனியார் துறையைச் சேர்ந்த தமது மிகப்பெரிய ஆதரவாளர்களான அவர்கள் இருவருக்கும் டிரம்ப் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
மஸ்க்கும் விவேக் ராமசாமியும் அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவது, அதிகப்படியான விதிமுறைகளையும் வீண் செலவினங்களையும் குறைப்பது மற்றும் கூட்டரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது ஆகியவற்றில் தனது நிர்வாகத்திற்கு உதவுவார்கள் என்று டிரம்ப் அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புதிய துறை அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.
2026 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதிக்குள் அவர்களின் பணி நிறைவடையும்.
இந்தப் புதிய துறை தொடங்கப்பட்டது குறித்து அண்மையில் தமது X பதிவில் கருத்துரைத்துள்ள இலோ மஸ்க், ஜனநாயகத்தைக் காட்டிலும் அதிகாரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அம்சங்களைக் கையாள்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், தமது அரசியல் நிலைப்பாட்டைக் குறிப்பிடும் வகையில், "நாங்கள் மெதுவாக செயல்பட மாட்டோம்" என்ற தனது சமீபத்திய கருத்துக்களால் விவேக் ராமசாமி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)