புது டெல்லி, 18 நவம்பர் (பெர்னாமா) -- மோசமடைந்து வரும் காற்றின் தரப் பிரச்சனையைக் கையாள இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனங்களின் போக்குவரத்தை உள்ளடக்கி கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நடவடிக்கைகளால் டெல்லியில் டீசலைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூர் நிர்வாகத்தின் ஆலோசனையின்படி வீட்டிலிருந்து வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையம் வழியாக பாடங்களை நடத்துவதற்கான அரசாங்க உத்தரவு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை புது டெல்லியில் உள்ள கேரளப் பள்ளிக்கு வெளியே விட்டுச் செல்வதைக் காண முடிந்தது.
சில உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் முகக்கவசம் அணியாமல் மோசமான புகைமூட்டத்திலும் பள்ளிக்குச் செல்கின்றனர்.
புது டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணிநேரம், காற்றுத் தரக் குறியீடு 484 ஆக பதிவாகி உள்ளதாக இந்தியாவின் காற்றுத் தூய்மைக்கேடு கட்டுப்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது மிக மோசமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இந்த ஆண்டில் பதிவான மிக மோசமான காற்றுத் தரக் குறியீடாகும்.
டெல்லியில் காணும் திறன் 100 மீட்டர் வரை குறைந்துள்ளது.
ஆனால் விமானங்கள் மற்றும் ரயில்கள் சில தாமதங்களுடன் தொடர்ந்து இயங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)