டிங்கில், 19 நவம்பர் (பெர்னாமா) - கடந்த நவம்பர் 12ஆம் தேதி சிலாங்கூர், மேற்கு கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கடத்தல் சிகரெட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்ட 63 லட்சத்து 80,000 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு முத்திரைகளிலான 83 லட்சத்து 90,000 வெள்ளை சிகரெட்டுகளை அரச மலேசிய சுங்கத் துறை JKDM பறிமுதல் செய்தது.
காலை மணி 11 அளவில் ஆறு கொள்கலன்களின் மீது சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 50 வயதிற்கு இடைப்பட்ட உள்நாட்டு ஆடவரான கப்பல் முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக JKDM-இன் அமலாக்கத்திற்கான துணைத் தலைமை இயக்குநர் ரைஸாம் செதாப்பா தெரிவித்தார்.
இந்த சிகரெட்டுகள் பலதரப்பட்ட பொருட்கள் என்று பதிவு செய்யப்பட்டது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமலாக்கத் தரப்பை ஏமாற்றும் நோக்கத்துடன், அந்த கொள்கலன்களின் முன்பகுதியில் தின்பண்டங்கள் அடங்கிய பெட்டிகள், தானிய பொருட்கள் மற்றும் குளிர்பான பொட்டலங்களால் நிறப்பட்டிருந்த வேளையில், கடத்தல் சிகரெட்டுகள் அனைத்தும் உட்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
தெற்காசிய நாடுகளிலிருந்து உள்நாட்டு சந்தைக்காக அந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்யத தரப்பை அடையாளம் காண்பதில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ரைஸாம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)