உலகம்

உக்ரேன் - ரஷ்யா போர் நிறைவடைந்து ஆயிரம் நாட்கள் கடந்தது

20/11/2024 06:38 PM

உக்ரேன், 20 நவம்பர் (பெர்னாமா) -- உக்ரேன் மீது ரஷ்யா முழுமையான படையெடுப்பை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஆயிரம் நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு கீவ் குடியிருப்பாளர்கள் ஆயிரம் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து இந்நாளை அனுசரித்தனர்.

அடிக்கடி ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் முற்றுகையிடப்பட்ட கீவ், பல முனைகளில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களினால் போராடி சோர்வடைந்த துருப்புக்களுடன் இந்நாளை அனுசரித்துள்ளது.

போரில் பல உறவினர்களை இழந்த அங்குள்ள மக்கள், உக்ரேன் துருப்புகளுக்காகவும் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்ததாக கூறினர்.

இந்த தாக்குதல்களில், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் பலியான வேளையில், 60 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதோடு, விளாடிமிர் புடினின் தரை, கடல் மற்றும் வான்வழி படையெடுப்பு உத்தரவினால் மக்கள் தொகை அங்கு அதிகம் குறைந்துள்ளது,

இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மோதலாக உருவெடுத்தது.

உக்ரேனின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குடும்பங்கள் இந்த வன்முறை தாக்குதலால் பாதிப்படைந்துள்ள நிலையில் வான்வழித் தாக்குதல்களாலும் இறைச்சல்களாலும் மக்கள் பல இரவுகள் தூக்கத்தை இழந்துள்ளனர்.

இதனிடையே, ரஷ்யாவுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதே இதற்கெல்லாம் தீர்வாகும் என்று உக்ரேன் தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முழு அளவிலான உக்ரேன் படையெடுப்பின் 1000 நாட்கள் குறித்து, நேற்று நியூயார்க்கின், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கருத்துரைத்தார்.

அனைத்துலக சட்டத்தின் கட்டமைப்பிற்குள் அமைதியை அடைவதில் உக்ரேனின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் கிஸ்லிட்சியா வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)