பொது

நெருக்கடியான சூழலிலும் இந்திய சமூகத்திற்கு நிறைவான பல திட்டங்கள்

21/11/2024 07:59 PM

கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) --   15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நெருக்கடியான சூழலில் ஆட்சி அமைத்து பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கம் தனது ஈராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவிருக்கின்றது.

இரண்டு ஆண்டுகளாக மக்கள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில், பொருளாதாரம், கல்வி, சமூகம், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், பி40, எம்40 பிரிவினர், உதவித் தொகை, வட்டியில்லா கடனுதவி போன்ற பல திட்டங்கள் வழியாக இந்திய சமுதாயம் கண்டிருக்கும் நன்மைகள் குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், கேசவன் சுப்ரமணியம் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் இனம், மதம், சமயம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து இன மக்களும் நன்மையடையும் வகையில் பல திட்டங்களும் ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்படுகின்றன.

அவற்றின் மூலம் இதர இனத்து மக்களைப் போல இந்திய சமூகமும் பல எண்ணற்ற பலன்களை அடைந்திருப்பதை கேசவன் சுப்ரமணியம் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில், பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்கள் பெற்றுள்ள எஸ்.டி.ஆர் எனப்படும் ரஹ்மா உதவி தொகை அதற்கு முதன்மை சான்றாகும்.

"குடும்ப தலைவர், 10 மில்லியன் குடும்ப தலைவர். இந்த பி40 கீழ் இருப்பவர்கள் எஸ்.டி.ஆர் வழியாக 10 பில்லியன் இவ்வாண்டு பெற்றுள்ளனர். அதில் இந்தியர்களுக்கு எவ்வளவு. ஆக, நான் DOSM அவர்களிடம் 2024-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தை எடுத்து பார்க்கும் பொழுது 7 லட்சம் இந்தியர்கள் எஸ்.டி.ஆர் உதவித் தொகை இவ்வாண்டு பெற்றுக் கொண்டார்கள்", என்று அவர் கூறினார்.

முன்னதாக, மலாய் மற்றும் சீன சமுதாயத்தின் பாரம்பரிய கிராமங்களை முறையாக நிர்வாகம் செய்து பராமரிக்க அவை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது முதல்முறையாக மலேசிய மடானியின் கொள்கைக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய கிராமங்களின் நலன் மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கி சில ஒதுக்கீடுகள் வழங்கியிருப்பது இந்திய சமுதாயத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துவதாக அவர் விளக்கினார்.

"இந்த பிரச்சனையை அவரின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். அதாவது மலேசியாவில் கிராமங்கள் இருக்கின்றது, இந்திய கிராமங்கள் இருக்கின்றது. ஆனால், இந்திய கிராமங்களுக்கு எந்தவிதமான மேம்பாடு திட்டங்களுக்கு மானியம் ஒதுக்கப்படவில்லை. காரணம் இது எந்த அமைச்சின் கீழ் இல்லை என்று சொல்லும்போது அவர் அதனை செவியெடுத்து, அமைச்சரவையில் அதை பேசி இப்பொழுது வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் அதை வைத்து விட்டார்கள். 10 மில்லியன் அதற்கு பிரதமர் அறிவிப்பு செய்தார். இது வரவு செலவு தாக்கலின் போது பேசப்படவில்லை. இது ஒரு புதிய விஷயம் தானே", என்றார் அவர்.

இதனிடையே, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக எதிர்வரும் காலங்களில் மடானி அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது கேசவன் சுப்ரமணியம் இவ்வாறு விவரித்தார்.

"இந்தியர்களின் சொத்துடமை. ஆகப்புதிய புள்ளிவிவரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அந்த பதிலுக்கு எடுக்கும்போது 1.15 விழுக்காடு தான் இந்தியர்களின் சொத்துடமை. ஆக, ஏறத்தாள பழைய அரசில் பார்த்தோமானால் இதற்கு முன்பாக இந்தியர்களின் சொத்துடமை 3 விழுக்காடு அடைய வேண்டும் என்று இலக்கு இருந்தது. இன்றுவரை அந்த இலக்கு நிறைவேறவில்லை. ஆக, இதையும் நாங்கள் அவரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்", என்று தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத் துறைகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் உட்பட இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு குறித்தும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பதை கேசவன் சுப்ரமணியம் தெளிவுப்படுத்தினார்.

எனவே, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஆட்சி ஆக்கப்பூர்வமான இலக்கை நோக்கிச் செல்வதாகவும், அதன் மூலம் இந்திய சமுதாயம் கணிசமான வளர்ச்சியை அடைய முடியும் என்று பெர்னாமாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது கேசவன் சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)