கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- தாமான் ஒயூஜியில் உள்ள வீடொன்றில் குளிர்சாதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பிரேதப் பரிசோதனையில் அப்பெண் மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதால், நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தது அதன் தொடக்கக்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இன்று காலை மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தடயவியல் துறையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட காலக்கட்டத்தைக் கண்டறிய உதவும் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று டத்தோ ருஸ்டி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
விசாரணையை நிறைவு செய்வதற்கு உதவ, இதுவரை ஒன்பது பேரின் விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணைக்கு உதவ பாதிக்கப்பட்டவரின் மகனான சந்தேக நபரின் தடுப்புக் காவல் இம்மாதம் 26ஆம் தேதி வரை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
53 வயதுடைய சந்தேக நபர் தற்போது பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)