உலகம்

கௌதம் அடானி மீது குற்றப்பதிவு; அடானி குழும பங்குகள் சரிவு

22/11/2024 07:13 PM

புது டெல்லி, 22 நவம்பர் (பெர்னாமா) -- கோடிக்கணக்கான அமெரிக்க டாலரில் கையூட்டு வழங்க முற்பட்டதாக, இந்தியாவின் அடானி குழுமத்தின் தலைவரும், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவருமான கௌதம் அடானி, அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் இந்தியாவில் சரிவு கண்டுள்ளன.

2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 25 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாக கையூட்டு வழங்குவதற்கு அவர் வாக்குறுதி அளித்ததாக நியூ யார்க்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

20 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட லாபத்தைத் தரும் என்று கணிக்கப்பட்ட சூரிய சக்தி ஒப்பந்தத்தைப் பெற அவர் இந்த வாக்குறுத்தியை அளித்துள்ளார்.

62 வயதுடைய அடானியை தவிர்த்து, அவரின் மருமகன் சாகர் அடானி மற்றும் அடானி கிரின் எனெர்ஜியின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி வினித் ஜாயின் உட்பட மேலும் எழுவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், போலி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் கடன், உறுதிப் பத்திரம் ஆகியவற்றின் வழி 300 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட இதர ஐவரான சிரில் கபேன்ஸ், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா, ரூபேஷ் அகர்வால் ஆகியோர் நடுவர் மன்றம், மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பங்குச் சந்தை ஆணையம், ஆகியவற்றின் விசாரணையைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட்டதாக நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் பிரோன் பீஸ் கூறினார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான குஜராத்தைச் சேர்ந்த அதானியின் செல்வம், கடந்த பல ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வந்துள்ளது.

முதலீடு, விமான நிலையம், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், சொத்து, பசுமை தொழில்நுட்பம், ஊடகம், சமையல் எண்ணெய், உட்பட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் பொருட்களுக்கான வர்த்தகத்தை அடானி குழுமம் மேற்கொண்டு வந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)