கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) -- தனது தாயைக் கொலை செய்து, கடந்த மூன்றாண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்திருந்த நபர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் அத்திகா முஹமட் என்கின்ற முஹமட் சயிம் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 53 வயதான என். டேனேஷ் என்ற பாஸ்டர், அதனைப் புரிந்ததாக தலையசைத்தார்.
இவ்வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளதால் அந்நபரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் 26-ஆம் தேதிக்குள் தனது தாயாரான 77 வயதான கேத்தரின் டேனியல் என்பவரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
நீதிமன்றம் அந்நபரை ஜாமினில் விடுவிக்கவில்லை.
தடயவியல் அறிக்கை, பிரேதப் பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிப்பதற்காக வழக்கின் அடுத்தகட்ட செவிமடுப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)