பொது

ஆசியானுக்குத் தலைமையேற்கும் மலேசியாவிற்குத் தாய்லாந்து பிரதமர் ஆதரவு

16/12/2024 05:41 PM

புத்ராஜெயா, 16 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் மலேசியாவிற்குத் தாய்லாந்து பிரதமர் பெத்தோங்தான் ஷினாவத்ரா தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் நலனுக்காகவும், ஒட்டுமொத்த ஆசியானுக்காகவும், மலேசியாவும் தாய்லாந்தும் இணைந்து செயல்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நம் உறவின் இயக்கவியலைப் பராமரிப்பதோடு அமைதி மற்றும் செழிப்புக்கான எங்களின் முயற்சிக்கு நான் உறுதியளிக்கிறேன், " என்றார் அவர்.

இதனிடையே, ஆசியானில் முழு உறுப்பினராக திமோர்-லெஸ்தே பங்கேற்பதை ஆதரிப்பதில் இரு நாடுகளும் உறுதியான ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

அடுத்தாண்டு மே மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஆசியான் கூட்டத்திற்குள் திமோர்-லெஸ்தே மீது விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய இரு தலைவர்களும் இணைந்து செயல்படுவதாகவும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், அடுத்த ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் தமக்கு, தனிப்பட்ட ஆலோசகராக, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமித்துள்ளார்.

ஒரு அரசியல்வாதியாக தக்சினின் அனுபவமும் அறிவுரைகளும் மலேசியாவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத் உடனான நமது சிறந்த உறவைத் தொடர்ந்து, நான் அவரை என் தனிப்பட்ட ஆலோசகராகவும், முறைசாரா அமைப்பில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் குழுவை நியமிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளேன், இந்த நிலையில் நமக்கு அரசியல் தலைவர்களின் அனுபவங்கள் தேவை, இந்த முடிவினை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி, " என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)