அடுத்தாண்டுக்கான ஆசிய சீலாட் போட்டியில் தங்கம் வெல்லும் வேட்கையில் தாமராஜ்

25/12/2024 06:57 PM

சிப்பாங், 25 டிசம்பர் (பெர்னாமா) - உலக அரங்கில் நடைபெற்ற சீலாட் போட்டியில், உலக வெற்றியாளராகி நாட்டிற்குப் பெருமை சேர்த்த முதல் இந்தியரான தாமராஜ் வாசுதேவன், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் போட்டிக்கு தம்மை தயார்படுத்த தொடங்கியுள்ளார்.

அடுத்தாண்டு, உஸ்பெகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஆசிய சீலாட் போட்டியில் களமிறங்கவிருக்கும் தாமராஜ், கடந்த முறை கைநழுவிப் போன தங்கப் பதக்கத்தை இம்முறை வென்றாக வேண்டும் என்ற வேட்கையுடன் பயிற்சி பெற்று வருகிறார்.

''ஆசிய சீலாட் போட்டியில் இதற்கு முன்னர் தாமராஜ் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றீர்கள். அடுத்து தங்கம் வெல்ல வேண்டுமா?'' என்று எழுப்பிய கேள்விக்கு,

''ஆம். உண்மைதான். அடுத்த போட்டியில். ஆசியப் போட்டியிலும்தான். என் இலக்கு தங்கம். மலேசியாவிற்குத் தங்கப் பதக்கத்தைக் கொண்டுவர வேண்டும், '' என்று தாமராஜ் வாசுதேவன் அவ்வாறு பதிலளித்தார்.

இவ்வாண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற 2024 ஆசிய சீலாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான் போட்டியாளர் குடோய்பெர்டிவ் டிபெகிடம் தோல்வி கண்ட தாமராஜ் வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஐக்கிய அரபு சிற்றரசு, அபு டாபியில் நடைபெற்ற 20வது உலக சீலாட் வெற்றியாளர் போட்டியில் அதே விளையாட்டாளரைத் தோற்கடித்து தாமராஜ் உலக வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)