செர்டாங், 27 டிசம்பர் (பெர்னாமா) - 18 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சூதாட்ட உபகரணங்கள், கடத்தல் பொருள்கள், சிகரெட் மற்றும் மின்னியல் விளையாட்டு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட பொருள்களைச் செர்டாங் போலீஸ் அழித்தது.
336 விசாரணை அறிக்கைகளை உட்படுத்தி 2016இல் இருந்து 2023ஆம் ஆண்டிற்கு இடையில் தீர்க்கப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட மூன்று லட்சத்து 53-ஆயிரத்து 400 பொருள்கள் அதில் அடங்கும் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
பி.தி.கே.பி.என் D207 எனப்படும் தேசிய போலீஸ் படைத் தலைவரின் உத்தரவு மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்ஷன் 407ஏயின் அடிப்படையில் அந்த ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏ.சி.பி. ஏ. அன்பழகன் கூறினார்.
''எட்டு வாகனங்கள், 353,400 சிகரெட் பெட்டிகள், 168 மடிக்கணினிகள், 59 கையடக்கக் கணினிகள், 32 மோடம் மற்றும் திசைவி, 14 மின்னியல் விளையாட்டு இயந்திரங்கள் மற்றும் நீதிமன்றத்தால் அழிக்கப்பட்ட பிற பொருள்கள் உட்பட 352,515 பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அழிக்கப்பட்டன, '' என்றார் அவர்.
இந்த ஒழிப்பு நடவடிக்கையினால் பராமரிப்பு செலவுகள் குறைக்கப்படுவதாக இன்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)